

அருகிவரும் புலிகளை காக்கும் மகாராஷ்டிர அரசின் இயக்கத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகல்கர் தன்னை இணைத்துக்கொள்ள உள்ளார்.
உலக புலிகள் தினத்தையொட்டி கடந்த ஜூலை 29-ம் தேதி, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு மகாராஷ்டிர நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கடிதம் எழுதினார். இதில் புலிகளை காப்பதற்கு மாநில அரசு தொடங்கியுள்ள இயக்கம் குறித்தும், இதன் தூதராக தங்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் கேட்டிருந்தார்.
இதற்கு கடந்த 10-ம் தேதி அமிதாப் பச்சன் அளித்த பதிலில், புலிகளை காக்கும் இயக்கத்தின் தூதராக நியமிக்கப்பட்டால் அதை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து கடந்த 13-ம் தேதி அமைச்சர் சுதிருக்கு டெண்டுல்கர் எழுதிய கடிதத்தில், “புலிகளை பாதுகாக்கும் திட்டத்தில் உங்கள் குழு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். இது தொடர்பாக விவாதிப்பதற்காக உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
நான் விளையாடும் காலத்தில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் ஒன்றில் செஞ்சுரி அடித்தபோது, அந்த வெற்றியை புலிகளுக்கு அர்ப்பணித்ததை நினைவுகூர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “புலிகளை காக்கும் இயக்கத்தின் தூதராக என்னிடம் அரசு என்ன எதிர்பார்க்கிறது? என்னென்ன பணிகள் நான் மேற்கொள்ள வேண்டும்?” என்றும் சச்சின் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.