Last Updated : 14 May, 2020 11:57 AM

 

Published : 14 May 2020 11:57 AM
Last Updated : 14 May 2020 11:57 AM

உ.பி.யில் பேருந்து மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி: நடைபயணமாக பிஹாருக்குச் செல்ல முயன்றபோது பரிதாபம்

உ.பி. நெடுஞ்சாலை ஒன்றில் நடைபயணமாகச் சென்ற பிஹாரைச் சேர்ந்த ஆறு பேர் முசாஃபர் நகர் அருகே சாலை விபத்தில் பலியான துயரச் சம்பவம் நேற்றிரவு நடந்தது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியிடங்களிலேயே சிக்கிக்கொண்டனர். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் சொந்த இடங்களுக்குத் திரும்பும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

பல்வேறு விதிமுறைகளும் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருப்பதால் இந்த ரயில் பயண வாய்ப்பு பெரும்பாலானோருக்கு உடனடியாகக் கிட்டவில்லை. அரசின் உதவியைப் பெறுவதில் காலதாமதம் ஆகும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் நெடுஞ்சாலைகளில் நடைபயணம் என்பது பாதுகாப்பானதில்லை என்பதை பல்வேறு துயரச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

உ.பி. நெடுஞ்சாலை ஒன்றில் சொந்த ஊருக்கு நடைபயணமாகச் சென்ற 6 பேர் பேருந்து மோதி பலியான அதிர்ச்சி சம்பவம் குறித்து முசாஃபர் நகர் காவல்நிலை அதிகாரிகள் கூறியதாவது:

''முசாஃபர் நகரின் ஷகாரான்பூர் நெடுஞ்சாலையில் பிஹாரைச் சேர்ந்த ஒன்பது பேர் புதன்கிழமை பின்னிரவில் காலாலி சோதனைச் சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்நேரம் படுவேகத்தில் அவ்வழியே வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகினர். மூன்று பேர் காயத்துடன் உயிர் தப்பினர். பெயர் தெரியாத பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் பிஹார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நடைபயணம் மேற்கொண்டபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு முசாஃபர் ர்நகர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x