மன்மோகன் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடித்து வைக்கக்கோரும் சிபிஐ அறிக்கையை நிராகரித்தது சிறப்பு நீதிமன்றம்

மன்மோகன் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடித்து வைக்கக்கோரும் சிபிஐ அறிக்கையை நிராகரித்தது சிறப்பு நீதிமன்றம்
Updated on
1 min read

நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழக்கு உட்பட் 6 வழக்குகளை முடித்து வைக்குமாறு சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி சிபிஐ தனது முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதையடுத்து, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தினமும் விசாரிப்பதற்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சிறப்பு நீதிபதி பராஷர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

இதில் 15 வழக்குகள் தொடர்பான புலனாய்வு அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. இதில் 9 வழக்குகளில் மட்டும் குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்த சிபிஐ, 6 வழக்குகளை முடித்து வைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

5 வழக்குகளை முடித்து வைப்பதற்காக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிமன்றம், மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதில் ஒரு வழக்கு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஸா மாநிலத்தில் உள்ள தலபிரா 2 நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்தது தொடர்பானது ஆகும்.

இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் உள்ளிட்டோருக்கு கடந்த மார்ச் 11-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், ஏப்ரல் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் மன்மோகனுக்கு எதிரான சம்மனுக்கு தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ 5 வழக்குகளில் விசாரணையை தொடர்ந்து நடத்தியது.

6-வதாக பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்ளவும் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருந்து. இதுகுறித்து நீதிமன்றம் இன்னும் பரிசீலிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in