

மகாராஷ்டிராவில் மே 15-ம் தேதி முதல் வீட்டுக்கு மது விநியோகம் செய்யப்படும் என்றும் அதற்கான விதிமுறைகள் குறித்தும் மாநில கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்கான ஊரடங்கின் விதிமுறைகளில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனையொட்டி பல மாநிலங்களிலும் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிடப்பட்டது. மகாராஷ்டிராவில் மதுபானக் கடைகளுக்கு எதிரே சமூக இடைவெளி இன்றி கூட்டம் அலைமோதியதால் மறுநாளே கடைகளை மூட மாநில அரசு உத்தரவிட்டது.
எனவே கடைகளில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக மாநில அரசு வீட்டுக்கு மதுபானத்தை டோர் டெலிவரி செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும், கடை உரிமையாளர்கள் இதற்காக தயாராக இன்னும் சிலநாள் அவகாசம் கோரியதால், இந்தச் சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என்று மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கலால் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்:
''கட்டுப்படுத்தப்படாத மண்டலங்களில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் மதுபானம் விநியோகம் ஆன்லைனில் தொடங்க உத்தரவிடப்படுகிறது.
ஒரு கடை உரிமையாளர் 10க்கும் மேற்பட்ட விநியோக நபர்களை நியமிக்க அனுமதியில்லை, ஒரு விநியோக நபர் ஒரே நேரத்தில் 24 பாட்டில்களுக்கு மேல் மதுபானங்களை எடுத்துச் செல்லக் கூடாது.
நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கட்டணங்கள் உள்ளதால், கடை உரிமையாளர்கள் பாட்டிலில் அச்சிடப்பட்ட எம்ஆர்பிக்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
ஆன்லைன் விற்பனை இருந்தபோதிலும், மதுபானக் கடைகள் அதன் ஊழியர்களின் உடல் ரீதியான தூர மற்றும் சுத்திகரிப்புக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது என்பது வாங்குபவருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமாகும். எனவே அவர்களுக்கு இடையே எந்தவொரு மோதலுக்கும் அரசு பொறுப்பாகாது''.
இவ்வாறு மகாராஷ்டிர அரசின் கலால் துறை தெரிவித்துள்ளது.