

ராஜஸ்தானில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆம்புலன்ஸ் சேவை ஒப்பந்தத்தில் ரூ.2.58 கோடி ஊழல் நடைபெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக சிகித்சா ஹெல்த்கேர் தனியார் நிறுவன முன்னாள் மற்றும் இப்போதைய அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மத்திய கிராம சுகாதார திட்டத்தின் (என்ஆர்எச்எம்) கீழ் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த 2010-11 ஆம் ஆண்டுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டெண்டர் அளிக்கப்பட்டிருந்தது. அது, அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக ‘சிகித்சா ஹெல்த்கேர்’ நிறுவனத்துக்கு முறைகேடாக அளிக்கப்பட்டதாகவும், இதில் ரூ. 2.58 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் ஜெய்ப்பூரின் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு ராஜஸ்தானில் ஆட்சியில் உள்ள வசுந்தராஜே தலைமையிலான பாஜக அரசு பரிந்துரைத்தது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், ரவி கிருஷ்ணா (முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன்), சிகித்சா ஹெல்த்கேர் நிறுவன இயக்குநர் ஸ்வேதா மங்கள், தேசிய ஊரக சுகாதாரத்துறை இயக்குநர், சுகாதார அமைச்சராக இருந்த துரு மிர்ஸா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட், ரவி கிருஷ்ணா ஆகியோர் முன்பு சிகித்சா நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் மறுப்பு
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், “2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத்தின் தனிப்பொறுப்பு இயக்குநராக இருந்தேன். அந்நிறுவனத்தின் செயற்பிரிவு இயக்குநராக நான் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அந்நிறுவனத்தின் நிர்வா கத்தில் நான் எப்போதுமே தலையிட்டதில்லை.
சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத் தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல முதலீடு செய்திருந்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத் துள்ள கிரித் சோமியாவை சிகித்சா நிறுவனம் முறைகேட்டு புகாரில் பணிநீக்கம் செய்திருந்தது. அதனால் அவர் அவதூறு பரப்பி யிருக்கலாம். மேலும், அந்நிறு வனத்தில் எனக்கு பங்கு ஏதும் இல்லை” என்றார்.
இதேபோல சச்சின் பைலட் உட்பட குற்றச்சாட்டை எதிர்கொண்ட அனைவருமே அதனை மறுத் துள்ளனர். இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. அந்த நிறுவன பொறுப்பில் இருந்து 2002-ம் ஆண்டு இறுதியிலேயே விலகிவிட்டேன் என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சிகித்சா ஹெல்த்கேர் நிறுவனத் தின் இயக்குநர்கள் ஸ்வேதா மங்கள், நரேஷ் ஜெயின், ரவி கிருஷ்ணா ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதில் எந்த விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.