Published : 13 May 2020 07:46 AM
Last Updated : 13 May 2020 07:46 AM

கருணையின் வடிவமாக திகழ்பவர்கள் செவிலியர்கள்: செவிலியர் தினத்தில் பிரதமர் மோடி புகழாரம்

செவிலியர்கள் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான உன்னத பணியை செய்கிறார்கள். அவர்கள் கருணையின் வடிவம் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நமது பூமி நலமாக இருப்பதற்காக இரவு பகல் பாராமல் அயராது உழைக்கும் செவிலியர்களுக்கு நன்றி கூறுவதற்கான சிறப்பு தினம் இந்த சர்வதேச செவிலியர் தினம்.செவிலியர்களின் தாயாகப் போற்றப்படுபவர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல். அவரை ஊக்கமாக கொண்டு அயராது பாடுபடும் செவிலியர்கள் கருணையின் வடிவமானவர்கள். கரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த நேரத்தில் அதை ஒடுக்குவதற்காக உன்னத பணியை அவர்கள் செய்கின்றனர்.

செவிலியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். செவிலியர் சமூகத்தின் நலனில் முழுஈடுபாடு கொண்டு அரசு செயல்படும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். செவிலியர் துறையில் மேலும் பல வாய்ப்புகள் உருவாவதை நாம் உறுதி செய்ய வேண்டும். போதுமான எண்ணிக்கையில் செவிலியர்கள் இருக்க வேண்டும். பற்றாக்குறை இருக்கக் கூடாது. இந்த துறை மீது நாம் அதிக கவனம் செலுத்துவது அவசியமானதாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் செவிலியர்களை பாராட்டியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மருத்துவ உலகின் முதுகெலும்பாக இருப்பவர்கள் செவிலியர்கள்தான். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அவர்கள் ஆற்றும் பணி மெச்சத்தக்கதாகும். மனித குலத்துக்கு சேவை புரியும் தன்னலமற்ற செவிலியர்களுக்கு எனது நன்றி. கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் அயராது உழைக்கும் செவிலியர்களுக்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது" என கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில், "கரோனா வைரஸ்தொற்றை தடுக்கும் யுத்தத்தில் முதல் வரிசை களப் பணியாளர்களாக நின்று போராடுபவர்கள் செவிலியர்கள்தான். அவர்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x