

ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரோக்கிய சேது செயலியை இதுவரை 9.8 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி சுமார் 13,000 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மக்களின் அந்தரங்க தகவல்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம். தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாதிக்கப்படாத நபர்கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாட்களில் நீக்க முடியும்.
இதுபோல, பரிசோதனை செய்யப்பட்டவர் கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்ட நபர்கள் 60 நாட்களிலும் தங்களைப் பற்றிய தகவலை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்கி விடலாம். மேலும் 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது.
ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத்தண் டனை விதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.