Last Updated : 31 Aug, 2015 07:46 PM

 

Published : 31 Aug 2015 07:46 PM
Last Updated : 31 Aug 2015 07:46 PM

நொய்டாவின் போக்குவரத்தை சமாளிக்க சமூக இணையதளம் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு

உபியின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நெரிசலான போக்குவரத்தை சமாளிக்க பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளம் மூலமாக கருத்து கேட்கப்படுகிறது. அம் மாநில போக்குவரத்து போலீஸார் சார்பில் ஒருமாத காலத்திற்கு இந்த கருத்துக்கள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்பட்டுள்ளன.

நம் நாட்டின் தலைநகரான டெல்லியை ஓட்டியபடி அமைந்துள்ள இரட்டை நகரம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா. உபி மாநிலத்தின் கௌதம்புத்தர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இங்கு அலுவலகம் துவங்கும் மற்றும் முடியும் வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அருகிலுள்ள வேற்று நகரங்களில் இருந்து இதன் வழியாக டெல்லிக்கு வர தாஜ் மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளும் அமைந்துள்ளதால் மேலும் நெரிசல் அதிகமாகி விடுகிறது.

இதை சமாளிப்பது நொய்டா போலீஸாருக்கு தொடர்ந்து பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இதை சமாளிக்க அந்த போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமே கருத்து கேட்டு தீர்வு காண நொய்டா போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கி ஒரு மாத காலத்திற்கு தம் கருத்துக்களை பொதுமக்கள் சமூக இணையதளம் வழியாக பதிவு செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்து கேட்பு விண்ணப்பம் நொய்டா போலீஸாரின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளின் இணையதளப் பக்கங்களில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து மீதானப் குறைகள், நிவர்த்தி செய்ய வழி மற்றும் கருத்துகளுடன் நிரப்பி தமது பெயர், ஈமெயில், மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் நொய்டா போலீஸாருக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் நொய்டாவின் போக்குவரத்து காவல்துறை கணகாணிப்பாளரான ஆர்..என்.பி.மிஸ்ரா கூறியதாவது: பல நேரங்களில் நொய்டாவின் போக்குவரத்து பிரச்சனைகளை எங்களால் அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது. ஆனால், அதன் வழியாக தினமும் பயணம் செய்யும் பொதுமக்களால் எளிதாக அடையாளம் காண்பதுடன் அதற்கானத் தீர்வையும் அளிக்க முடியும். எனவே, இதை அவர்களிடமே பெற்று போக்குவரத்தை சீர் செய்வதுடன் சாலை பாதுகாப்பையும் பராமரிக்க முடியும்.

இதில் சாலை ஆக்கிரமிப்பாளர்கள் மீதான சரியான தகவல்களும் எங்களுக்கு புகைப்படங்களுடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இவை தொடர்ந்து 15 தினங்களுக்கு பெற்ற பின் அதன் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இதில் மிகவும் அவசியம் எனக் கருதுபவர்களிடம் மட்டும் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசப்படும். ஒருமாத காலத்திற்கு பின்பான இந்த கருத்து கேட்பில் கிடைக்கும் பலனை பொறுத்து அதன் கால நிர்ணயம் நீட்டிக்கப்படும். எனக் தெரிவித்தார்.

ஏராளமான ஐடி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிறுப்புகள் மற்றும் மால்களுடன் வளர்ந்து வரும் இரட்டை நகரமான நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் இருந்து நாள்தோறும் டெல்லிக்கு சென்று வருபவர்களும் அதிகம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x