Published : 12 May 2020 08:27 PM
Last Updated : 12 May 2020 08:27 PM

‘‘கரோனா; பொருளாதார மீட்புக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள்’’ - பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆலோசனைகள் நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

அதன்படி 3-வது கட்ட லாக்டவுன் வரும் 17-ம் தேதி முடிவதையடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தளர்த்தும் முடிவு குறித்து வெவ்வேறு கருத்துக்களை மாநில அரசுகள் முன் வைத்தன. சில மாநில அரசுகள் ஊரடங்கு தொடர வேண்டும் எனவும், சில தளர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.

மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்கக் கோரியுள்ளனர். பல முதல்வர்கள் லாக்டவுனில் தளர்வுகள் இருக்க வேண்டும், கரோனா மண்டலங்களை பிரிப்பதை மாநில அரசுகள் கையில் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டனர்.

மேலும், மாநிலங்களுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இயக்கும் முன் மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது என சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, பிஹார், தமிழக முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

கடந்த 4 மாதங்களாக உலகம் முழுவதுமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நமக்கு இது ஒரு புதிய அனுபவம், எதிர்பாராத பாதிப்பு. இந்த சோதனையான கட்டத்தில் நமது அன்பு உறவுகள் சிலரை நாம் இழந்துள்ளோம்.

உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.

கரோனா பாதிப்பு தொடங்கியபோது நம்மிடம் பிபிஏ கிட்கள் கிடையாது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கிட்களை நாமே தயாரிக்கிறோம். உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.

உலகம் ஒரு குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. அதனை நாம் இப்போதும் உறுதிப்படுத்தியுள்ளோம். நமக்கு சுயநலம் இல்லை. இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வழிகோலும்.

கரோனவுக்கு எதிரான போரில் நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். தொடர்ந்து முன்னேறுவோம். யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. 130 கோடி இந்தியர்களும் இதற்காக உறுதி ஏற்போம்.

கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும். பொருளாதார மீட்பு பணியில் உள்கட்டமைப்பு பணிகள் மிக முக்கியம். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கவதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பொருளாதார மீட்பு நடவடிக்கைான திட்டங்கள் மற்றும் ஊரடங்கு பெரும் தளர்வுகளுடன் மீண்டும் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x