Last Updated : 12 May, 2020 05:50 PM

 

Published : 12 May 2020 05:50 PM
Last Updated : 12 May 2020 05:50 PM

கேரளாவின் கரோனா ஹாட் ஸ்பாட் காசர்கோட்டை மீட்ட ஐபிஎஸ் அதிகாரி; 2-வது கட்ட அலையிலும் சிக்காமல் காக்கும் ‘ட்ரிப்பிள் லாக் சிஸ்டம்’ 

கரோனா வைரஸ் கேரளாவில் தீவிரமாகப் பரவிய மார்ச் மாதத்தில் ஹாட் ஸ்பாட்டாக இருந்தது வடக்கு எல்லையில் இருக்கும் காசர்கோடு மாவட்டம்தான். கேரளாவில் மட்டுமல்ல நாட்டிலேயே முதல் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டதும் காசர்கோடுதான்.

கேரளாவின் மொத்த கரோனா நோயாளிகளில் பாதிப்பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அங்கு கூடுதல் கவனத்தையும், முக்கியத்துவத்தையும், மருத்துவ சிகிச்சையையும் அளித்தது கேரள அரசு. அதோடு சிறப்புப் பணிக்காக ஐபிஎஸ்அதிகாரி ஐஜி விஜய் சஹாரேவை நியமித்தார் முதல்வர் பினராயி விஜயன்.

மருத்துவ சிகிச்சை, பரிசோதனைகள் ஒருபுறம் நடந்தாலும் மக்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து கரோனா இல்லாத மாவட்டமாக மாற்றிய பெருமை ஐபிஎஸ்அதிகாரி விஜய் சஹாரேவையே சாரும். ஞாயிற்றுக்கிழமை முதல் கரோனா இ்ல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது காசர்கோடு. கொடுத்த பணியை முடித்துவிட்டு விஜய் சஹாரேவும் புறப்பட்டுவிட்டார்.

ஐபிஎஸ் அதிகாரி விஜய் சஹாரே

ஒரு நேரத்தில் மாவட்டத்தில் 164 கரோனா நோயாளிகள் இருந்த நிலையில், தன்னுடைய 'ட்ரிப்பிள் லாக் சிஸ்டம்' மூலம் நோயாளிகள் இல்லாத மாவட்டமாக விஜய் சஹாரே மாற்றியுள்ளார்.

கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து மலையாள மக்கள் கப்பலிலும், விமானத்திலும் கேரளாவுக்கு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்று கரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட காசர்கோடு மாவட்டத்துக்கு, மகாராஷ்டிராவிலிருந்து வந்த 4 பேரால் மீண்டும் கரோனா உருவாகியுள்ளது.

காசர்கோடு மாவட்டத்தில் 2-ம் கட்டகரோனா அலை உருவாகுமா எனும் அச்சம் மக்கள் மனதில் எழுந்தாலும், தான் வகுத்த ட்ரிப்பிள் லாக் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று ஐபிஎஎஸ் அதிகாரி விஜய் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அது என்ன 'ட்ரிப்பிள் லாக் சிஸ்டம்'? அதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி விஜய் சாஹரே அளித்த பேட்டியில் கூறியதாவது:

''காசர்கோடு மாவட்டத்துக்கு என்னை சிறப்பு அதிகாரியாக நியமித்தபோது இங்கு 164 கரோனா நோயாளிகள் இருந்தார்கள். கரோனா நோய் பரவலைத் தடுக்க முதலில் மக்களை ஒருவருக்கு ஒருவர் சந்திக்க விடக்கூடாது, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன்.

2-வது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளில் கண்காணி்ப்பில் உள்ளவர்கள், சுயதனிமையில் இருப்பவர்கள் வெளியே யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது. கடைசியாக, நோயாளிகளின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புகளை அடையாளம் கண்டுபிடித்தல். இதை தீவிரமாக மனதில் வைத்து ட்ரிப்பிள் லாக் சிஸ்டத்தைக் கண்டறிந்தோம்.

இதை அடிப்படையாக வைத்துதான் ட்ரி்ப்பிள் லாக் சிஸ்டத்தை உருவாக்கினேன். இதன்படி முதல் லாக் முறையில் மக்களை மாவட்டத்தை விட்டு எங்கும் செல்லாமல் தடுத்தோம், யாரும் புதிதாக உள்ளே வர வேண்டுமென்றால் அனுமதி பெற்றே வர வேண்டும். 2-வது லாக் முறையில் அனைத்து கரோனா நோயாளிகளையும் ஜிஎஸ்எஸ் முறையில் கண்காணித்தல். 3-வது கட்டம் என்பது கரோனா நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் உள்ள முதன்மை, மற்றும் இரண்டாம் நிலையில் தொடர்பு உடையவர்களைக் கண்டுபிடித்து வெளியே விடாமல் வைத்தோம்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அண்டை மாவட்டங்களில் இருந்து, சிவப்பு மண்டலத்திலிருந்து கூட காசர்கோடு வந்தால் அவர்களைக் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி ஜிஎஸ்எஸ் முறையில் கண்காணித்தோம். இதனால் கரோனா நோயாளிகள், அறிகுறி இருப்பவர்கள் யாரும் எங்கள் பார்வையிலிருந்து தப்பவில்லை.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் கேரள மக்களும் தங்கும் விடுதிகள், அல்லது ஹோட்டல்களில் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள். வெளிநாடுகளில் வரும் கேரள மக்கள் பலரும் அறிகுறி இல்லாமல் வந்து வீட்டுக்குள் சென்ற சில நாட்களிலேயே கரோனா நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள்.

இதைச் சமாளிக்கத்தான் இப்போது ட்ரிப்பிள் லாக் சிஸ்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம்.இப்போது நான் சென்றாலும் காசர்கோடு முழுமையாக ட்ரிப்பிள் லாக் சி்ஸ்டத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. காசர்கோடு மாவட்டத்தில் 2-ம் கட்ட கரோனா அலை வந்தாலும் ட்ரிப்பிள் லாக் முறை காக்கும்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் மக்கள் தொடர்ந்து உள்ளூர் போலீஸாராலும், கண்காணிப்புக் குழுக்களாலும் கண்காணி்க்கப்பட்டு உரிய அதிகாரிக்குத் தகவல் அனுப்புவர்.

இதுதவிர அவ்வப்போது போலீஸார் ட்ரோன்கள் மூலமும், போலீஸாரி்ன் கோவிட் பாதுகாப்பு செயலி மூலமும் அந்தப் பகுதியைக் கண்காணித்து யாரேனும் வெளியே வருகிறார்களா என்று கண்காணித்தார்கள்.

கண்காணிப்பை மீறி யாரேனும் வெளியே வரும் நபர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக அபராதம் அல்லது சட்டப்படி வழக்குப்பதிவு செய்தோம். மேலும் அரசின் தனிமைப்படுத்தும் முகாமில் இருப்பவர்களைக் கண்காணிக்கத் தனியாக காவல் துணை ஆய்வாளரையும் நியமித்தோம்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களின் செல்போனில் கோவிட்-19 பாதுகாப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இதே முறைதான் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளிலும் பின்பற்றப்படும்.

எங்களின் இந்த ட்ரிப்பிள் லாக் சிஸ்டத்தின் மூலம் 3 வாரங்களில் 64 நோயாளிகள் 5 பேராகக் குறைந்துவிட்டனர். ஏறக்குறைய 92 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த 11 நாட்களாக 2 கரோனா நோயாளிகள் மட்டுமே இருந்தார்கள், ஞயாற்றுக்கிழமை கரோனா இல்லாத மாவட்டமாக மாறியது''.

இவ்வாறி விஜய் சஹாரே தெரிவித்தார்.

தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த விஜய் சஹாரே காசர்கோட்டிலிருந்து மீண்டும் கொச்சி நகர காவல் ஆணையர் பணிக்குத் திரும்பிவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x