

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலம் தேறி இன்று வீடு திரும்பினார்.
இன்று நண்பகல் 12.30 மணிக்கு மன்மோகன் சிங் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 87) நெஞ்சுவலி காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் உடனடியாக இதயப்பிரிவு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் அவருக்குச் சிகிச்சையளித்தனர். மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால் நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
டெல்லியில் பரவலாக கரோனா தொற்று இருப்பதால் மன்மோகன் சிங்கிற்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாமா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்தலில் அதில் நெகட்டிவாக முடிவு வந்தது.
கடந்த இரு நாட்களாக மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் குறைந்து, உடல்நலம் தேறிவந்தார். இதையடுத்து, இன்னும் இரு நாட்கள் வரை மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் சூழல் கருதியும், மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாலும் அவரை வீ்ட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, சில முக்கிய மருத்துவ அறிவுரைகள மட்டும் கூறி இன்று நண்பகல் 12.30 மணிக்கு மன்மோகன் சிங்கை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பினர்.