Last Updated : 12 May, 2020 01:34 PM

 

Published : 12 May 2020 01:34 PM
Last Updated : 12 May 2020 01:34 PM

மே- 31 வரை ரயில், விமானம் வேண்டாம் – தமிழக முதல்வர் கோரிக்கையால் மதமாநாட்டிற்கு வந்த தமிழர்களின் பயணத்திற்கு தடையா?

கோப்புப் படம்

புதுடெல்லி

தப்லீக்-எ-ஜமாத்தின் மதமாநாட்டிற்கு வந்த தமிழர்களை ஏதாவது ஒரு சிறப்பு ரயிலில் தமிழகம் அனுப்பி வைக்க டெல்லி அரசு ஏற்பாடுகள் செய்து வந்தது. மே 31 வரை ரயில், விமானம் வேண்டாம் என முதல்வர் எடப்பாடி கோரியதால் இப்பயணம் தடைபட்டு போனதாகத் தெரிந்துள்ளது.

கடந்த மார்ச் 1 முதல் 22 வரை டெல்லி நிஜாமுத்தீனின் தப்லீக் தலைமையகத்தில் மதமாநாடுகள் நடைபெற்றன. இதற்கு தமிழகத்தில் இருந்து பெருமளவில் வந்த முஸ்லிம்களில் சுமார் 700 பேரால் திரும்ப முடியவில்லை.

இதே மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்களால் கரோனா தொற்றுக்கு உள்ளான இவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கும், தனிமை முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து தமிழர்கள் பரிதாபமாகப் பலியானதுடன், டெல்லியிலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டிருந்தனர்.

மீதம் உள்ளவர்கள் குணமாகி தமிழகம் செல்ல டெல்லி முகாம்களிலும் காத்திருக்கின்றனர். இதற்காக, தமிழகம் மற்றும் டெல்லி அரசுகளின் இணையதளங்களிலும் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து அனைவரையும் சென்னைக்கு அனுப்பி வைக்க நடைபெற்ற ஏற்பாடுகள் திடீர் என நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு விமானம், ரயில்களை மே 31 வரை அனுப்ப வேண்டாம் என கோரியது அதன் காரணமானது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி அரசு அதிகாரிகளின் வட்டாரம் கூறும்போது, ‘தமிழக முதல்வர் கோரியதால் தப்லீக்காரை ரயிலில் சென்னைக்கு அனுப்பும் திட்டம் ரத்தானது. அங்கு கரோனா தொற்று அதிகமுள்ளதால் திருச்சிக்கு அனுப்பி வைக்கலாமா? என தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்.

இதற்கு அனுமதி கிடைத்ததும் ஏதாவது ஒரு சிறப்பு ரயிலில் அவரவர் செலவுகளில் திருச்சிக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
தமிழகம் சேர்பவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து வீடுகளுக்கு அனுப்பும் விதம் குறித்து அம்மாநில அரசு முடிவு எடுக்கும்.

இதேவகையில் மற்ற மாநில ஜமாத்தினரும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் சார்பிலும் தற்போது முகாமில் உள்ள தமிழர்களின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, தொற்று நோய் பரவல் மற்றும் பேரிடர் மேலாண்மை விதி மீறல் பிரிவுகளில் தமிழர்கள் உள்ளிட்ட பல மாநிலத்தவர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது. இவர்களை திரும்ப அனுப்பது குறித்து டெல்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.

உத்திரப்பிரதேசத்தில் சிக்கிய சுமார் 170 தமிழர்கள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் சட்ட நடவடிக்கைகளால், அவர்கள் மட்டும் தமிழகம் திரும்ப மேலும் தாமதமாகும் எனக் கருதப்படுகிறது.

முகாமில் குணமாகிவிட்ட டெல்லியின் உள்ளூர் ஜமாத்தினர் நேற்று முன்தினம் முதல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கத் துவக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இரண்டு வகையான மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாகி கரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x