

டெல்லியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் பதிவு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.16.15 கோடி என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொழில்நுட்பக் காரணங்களால் சற்று தாமதமாகத் தொடங்கியது. புதுடெல்லியிலிருந்து இயக்கப்படும் 15 ரயில்கள், திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்குச் செல்கின்றன.
இதில் முதல் ரயில் டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேசம் பிலாஸ்பூருக்கு இன்று மாலை இயக்கப்படுகிறது. ஒருவார காலத்துக்கு இயக்கப்படும் இந்த ரயில்களில் பயணிக்க மொத்தம் 45 ஆயிரத்து 533 பயணிகள் டிக்கெட் பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.16.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரயில்வே துறை அறிக்கையில் தெரிவி்த்துள்ளது.
அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டு, குறைந்த அளவு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும். ஏசி 3 அடுக்குப் படுக்கையில் 52 பயணிகளும், 2-ம் வகுப்பில் 48 பயணிகளும் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு ரயில் புறப்படும் முன் 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும், அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும், பயணத்துக்கு முன்பாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் சொந்தமாக படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் என ரயில்வே சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் தங்கள் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை சார்பி்ல நேற்று மாலை வரை வெளியிட்ட வழிகாட்டுதலில் எந்த விதமான அறிவிப்பும் இல்லை. ஆனால், நள்ளிரவில் ரயில்வே துறையின் ட்வீட்டில், “சிறப்பு ரயலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் செல்போனில் ஆரோக்கிய செயலியைப் பதிவேற்றும் செய்வது கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளது.
மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், இந்தச் செயலியைப் பயணிகள் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்யக் கூறி ரயில்வே துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை பயணிகள் தங்கள் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவேற்றம் செய்யாமல் பயணிக்கும் பட்சத்தில் அதிகாரிகள் சோதனை செய்யும்போது கேள்விக்குள்ளாக்கப்படுவார்கள்.
ஆனால், ஆரோக்கிய சேது செயலியை கட்டாயமாக பயணிகள் மொபைல் போனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டாலும், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான வரையறை, விளக்கம் இல்லை.
அதேசமயம், ஆரோக்கிய சேது செயலியைப் பயணிகளுக்கு கட்டாயமாக்குது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் இதை எவ்வாறு கட்டாயமாக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கேள்வியாக வைக்கப்படுகிறது.