

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோதண்டராமர் கோயில், கோவிந்தராஜர் கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வரும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஏழுமலையான் கோயிலில் மட்டும் பக்தர்கள் தினமும் சராசரியாக உண்டியலில் ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை காணிக்கை செலுத்தி வந்தனர். இதன் மூலம் ஓராண்டின் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.1,200 கோடியாக உள்ளது. கடந்த 53 நாட்களாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், உண்டியல் வருவாய் மட்டுமின்றி, தங்கும் விடுதி, கடை வாடகை, பிரசாதம் விற்பனை மூலம் வரும் வருவாய் ஆகியவை முற்றிலுமாக நின்று போனது. இதனால் 53 நாட்களில் சுமார் ரூ.400 கோடி வரை தேவஸ்தானத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தேவஸ்தானத்தில் பணியாற்றும் 8 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் மற்றும் 15 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் எவ்வித பிடிப்பும் இன்றி முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 அல்லது 3 மாதங்கள் வரை இதேநிலை நீடித்தாலும் முழு ஊதியம் வழங்கப்படுமென தேவஸ்தான மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரூ.300 ஆன்லைன் டிக்கெட்
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்து அதன் மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ஏற்பாடு செய்யலாம் என தேவஸ்தானம் கருதுகிறது. அதன்படி ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விநியோகம் செய்து, அவர்களுக்கு தரிசன ஏற்பாடுகள், பிரசாத விநியோகம் செய்து தரப்பட உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று குறைந்ததும், படிப்படியாக பக்தர்களின் வருகை அதிகரிக்கலாம் என தேவஸ்தானம் கருதுகிறது. எனினும், மத்திய அரசு கோயில்களை திறக்கலாம் என அனுமதி வழங்கிய பிறகுதான் இது சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.