

திருப்பதி ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும்இருந்து பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை திருப்பி தர தேவஸ்தானம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் காணொலி மூலம் திருப்பதி பிரதான தேவஸ்தான அலுவலகத்தில்இருந்து பிற அலுவலகங்களில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், அணில்குமார் சிங்கால் பேசியதாவது: கரோனா தொற்று பரவலை தடுக்க கடந்தமார்ச் மாதம் 20-ம் தேதி முதல்தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது.அதன்படி, மார்ச் 14-ம் தேதி முதல்ஏப்ரல் 30-ம் தேதி வரை தரிசனங்களை ரத்து செய்துக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களுடைய ஆர்ஜித சேவை பணத்தை திருப்பிதர தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. 2,50,503 பக்தர்கள் இந்த கால கட்டத்தில் சுவாமியை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.
இவர்களில் 1,93,580 பேருக்கு இதுவரை அவர்களின் முன்பணம் திருப்பி வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளோருக்கும் விரைவில் அவர்களின் பணம் திரும்ப வழங்கப்பட்டு விடும். லாக் டவுன் தளர்வு செய்து, கோயில் திறக்க அனுமதி வழங்கினால், பக்தர்களுக்கு எவ்வாறு தரிசன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து மீண்டும் ஒருமுறை விவாதிக்கப்படும். அதன் பின்னர் அது பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அணில்குமார் சிங்கால் கூறினார்.