

தமிழகத்தில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், மதுக் கடைகளை திறந்தபோது கட்டுப் பாடற்ற நிலையில் கூட்டம் கூடியது. சமூக இடைவெளி உள்ளிட்ட நீதி மன்ற நிபந்தனைகள் பின்பற்றப் படவில்லை.
இதையடுத்து, நிபந்தனைகள் மீறப்பட்டதால் ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை மதுபானக் கடை களை மூட வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனால், திறக்கப்பட்ட இரண்டே நாளில் மதுக்கடைகள் மீண்டும் மூடப் பட்டன.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத் தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில், ‘மது பான விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதி மன்றம் தலையிட முடியாது. மேலும், மதுபான விற்பனைக்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளால் விற்பனைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.. ஒருவருக்கு வாரத்துக்கு 2 முறை 2 பாட்டில்கள் வீதம் விற்பனை செய்தால் கள்ளச்சந்தையில் மது பானங்கள் விற்பது அதிகரித்து விடும். இதனால், தமிழக அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த நிபந்தனைகளை நீக்க வேண்டும். அத்துடன் மதுக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வையும் ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தங்கள் தரப்பு கருத்துகளை கேட்காமல் மேல் முறையீட்டு மனு மீது எந்த உத் தரவும் பிறப்பிக்கக் கூடாது என மனு தாரர்கள் தரப்பில் கேவியட் மனுக் களும் தாக்கல் செய்யப்பட்டுள் ளன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நாளை (மே 13) விசா ரணைக்கு வரும் என்று தெரிகிறது.