Last Updated : 11 May, 2020 05:36 PM

 

Published : 11 May 2020 05:36 PM
Last Updated : 11 May 2020 05:36 PM

கரோனா நோயாளிகள் வீ்ட்டில் தனிமைப்படுத்தும் காலத்தை 17 நாட்களில் முடித்துக்கொள்ளலாம்: திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், அவர்கள் மாதிரி எடுக்கப்பட்ட தேதியிலிருந்து 17 நாட்களுக்குப் பின் தனிமையை முடித்துக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் இல்லாமல் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மீண்டும் பரிசோதனை செய்யத்தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் லேசான கரோனா அறிகுறிகளோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா அறிகுறிகள் லேசாக இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுடன் தொடர்பு வைக்காமல் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

கரோனா அறிகுறிகள் லேசானதுதான், தீவிரமானது அல்ல என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தப்படலாம். அந்த மருத்துவ அதிகாரிகளுக்கு தனிமையில் இருக்கும் நபர் தனது உடல் நிலை குறித்து அடிக்கடி தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்டக் கண்காணிப்பு குழுவுக்கும், அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர் மாதிரி எடுக்கப்பட்ட தேதியிலிருந்து 17 நாட்களில் தனது தனிமையை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் ஏதும் இல்லாமல் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்தும் காலம் அதாவது 17 நாட்கள் முடிந்தபின் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கரோனா அறிகுறிகள் தீவிரமாக இருந்து மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புப்படும் முன் ஆர்டி பிசிஆர் சோதனை மூலம் நெகட்டிவ் வந்தபின் செல்ல வேண்டும்.

கரோனா அறிகுறிகள் லேசாக இருப்பவர்கள் மற்றும் தொடக்க நிலை அறிகுறி இருப்பவர்கள் மருத்துமனையிலிருந்து அனுப்பப்படும் முன் பரிசோதனைகள் ஏதும் செய்ய வேண்டாம்.

இதுதவிர வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபருக்கு உதவும் உதவியாளர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முன்தடுப்பு நடவடிக்கையாக தகுதியான மருத்துவ அதிகாரியின் ஆலோசனைப்படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபருக்கு உதவி செய்ய ஒருவர் 24 மணிநேரமும் இருக்க வேண்டும். உதவியாளருக்கும், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் அடிக்கடி தொடர்பு இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவரின் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் அது இயக்கத்தில் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு உடனடியாக ஏதேனும் மருத்துவ சகிச்சை தேவைப்படும் அளவுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் அதாவது மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு எரிச்சல், மனரீதியான குழப்பம், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர் மருத்துவ அதிகாரியால் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது சந்தேகிக்கும் நபர் என்று உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு பாதிக்கப்பட்டநபர் கண்டிப்பாக சுய தனிமையில் இருக்க வேண்டும்''.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x