

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ் தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி உஸ்மான் என்கிற முகமது யாகூப் நாவேத் துக்கு 2 முறை வாகன உதவி செய்த வேன் டிரைவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டிரைவர் பெயர் குர்ஷீத் அகமது (எ) சூர்யா. அவந்திபுரா பகுதியைச் சேர்ந்த இவர், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தொடர்ந்து உதவி வந்துள்ளார்.
குர்ஷீத்தை கைது செய்தது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாதி உஸ்மான் மற்றும் அவரது கூட்டாளி முகமது நோமன் (எ) மோமின் ஆகியோரை குர்ஷீத் கடந்த ஜூலை 20-ம் தேதி ஜம்முவுக்கு வாகனம் மூலம் அழைத்து வந்துள்ளார். அந்த தீவிரவாதிகள் இருவரும் எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு திரும்பி விட்டனர். 35 வயதாகும் குர்ஷித் ஏற்கெனவே போதைமருந்து கடத்தல், பாதுகாப்பு படையினர் மீது கல்வீசித் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்” எனத் தெரிவித்தனர்.
குர்ஷீத் பற்றிய தகவலை என்ஐஏ காவலில் இருக்கும் உஸ்மான்தான் தெரிவித்துள்ளார்.
உஸ்மான் மற்றும் மோமின் இருவரும் கடந்த 5-ம் தேதி, எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொன்றனர். பதில் தாக்குதலில் மோமின் கொல்லப்பட்டார். மக்களை பணயக் கைதியாக பிடிக்க முயன்றபோது, உள்ளூர் மக்களால் உஸ்மான் பிடித்துக் கொடுக்கப்பட்டார்.