Published : 11 May 2020 01:32 PM
Last Updated : 11 May 2020 01:32 PM

போட்டியின்றி தேர்வாகிறார் உத்தவ் தாக்கரே; சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எம்எல்சி தேர்தலில் (சட்டமேலவை உறுப்பினர்) போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்டு நவம்பரி முடிவுக்கு வந்த போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே கடும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் எம்எல்ஏ.ஆகவோ, எம்எல்சி ஆகவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சட்டப்படி முதல்வராக நீடிக்க வேண்டுமெனில் அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ.ஆகவோ எம்எல்சி ஆகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வரும் மே மாதம் 27ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் எம்எல்ஏ ஆகவோ, எம்எல்சியாகவே இல்லாத உத்தவ் தாக்கரே பதவி நீடிப்பது குறித்து கேள்வி எழுந்தது.

மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. இடங்களுக்கு கடந்த 24ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் போட்டியிட்டு எம்எல்சியாக உத்தவ் திட்டமிட்டிருந்தார் ஆனால் கரோனாவினால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி மும்பையில் நடந்த மகாராஷ்ட்ரா அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில ஆளுநருக்கான 2 எம்எல்சி இடங்கள் ஒதுக்கீட்டில் ஒரு இடத்தில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கோஷ்யாரியை துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் சில அமைச்சர்கள் சந்தித்து உத்தவ் தாக்கரேயை எம்எல்சியாக நியமிக்க கோரிக்கை விடுத்தனர், ஆனால் ஆளுநர் எந்த உறுதியையும் அளிக்க வில்லை.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தவ் தாக்கரே பேசியதாக தகவல் வெளியானது. உத்தவ் தாக்கரே எம்எல்சியாக தேர்வாக வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று காலியாகவுள்ள எம்எல்சி பதவிக்கான தேர்தலை அறிவிக்கக் கோரி ஆளுநர் கோஷியாரி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி மே 21-ம் தேதி எம்எல்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில்
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எம்எல்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோரும் அப்போது உடன் சென்றனர். உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x