

பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்க இருந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காணொலி மூலம் நடத்தப்பட இருந்த இந்தக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அடுத்து எப்போது நடக்கும் என்றும் தெரிவிக்கப்படவில்லை என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிகள் கடன் கொடுத்திருக்கும் அளவு, கரோனாவால் ஏற்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கத்தை சரி செய்து, சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் திட்டங்கள், வட்டிக்குறைப்புப் பலன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கிடைத்ததா, கடன் திருப்பிச் செலுத்துவதில் அளிக்கப்பட்ட அவகாசத்தைப் பயன்படுத்திய அளவு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட இருந்தது எனத் தகவல்கள் வெளியாகின.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனுக்குப் பின் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ ரேட்டில் 75 புள்ளிகளைக் குறைத்தது. மேலும், வங்கிகளில் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்துவதில் 3 மாத அவகாசம் வழங்கியது. இந்தத் திட்டங்களால் எந்த அளவுக்கு மக்கள் பயன் பெற்றுள்ளனர், எத்தனை பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள் என ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது
ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைவால் வங்கிகளுக்குக் கிடைக்கும் கூடுதல் நிதியை வங்கிகள் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த அடிப்படையில் கடன் வழங்குவது குறித்தம் கூட்டத்தில் பேசப்பட இருந்தது. மேலும், குறு நிதி நிறுவனங்கள், என்பிஎப்சி ஆகியவற்றுக்கான நீண்டகால ரெப்போ செயல்பாடு (டிஎல்டிஆர்ஓ) எவ்வாறு, கடன் வழங்கிய அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட இருந்தது.
கரோனா காலத்தில் அவசரநிலைக் கடனாக நடுத்தர, சிறு நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டுக் கடனில் 10 சதவீதம் அளவுக்கு கூடுதலாகப் பெற்றுக்கொள்ளலாம், அதிகபட்சமாக ரூ.200 கோடி வரை பெறலாம் என்ற திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.