

தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கர்நாடகாவில் மதுவிற்பனை தொடர்கிறது. கரோனாவைரஸ் தொற்றையும் பொருட்படுத்தாமல் மதுக்கடைகளில் குவியும் கூட்டத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுவுக்கு ஆதரவாக தமிழகத்தில் குடிமகன்கள் பேசும் வீடியோக்கள் வைரலாகும் நிலையில், அதற்கு எதிராக பெண்கள் கண்ணீருடன் பேசுவதைக் கேட்கும் போது நெஞ்சம் பதைக்கிறது.
இந்நிலையில் மதுக்கடை திறக்கப்பட்டது தொடர்பாக ஆளும் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புகழேந்தி கூறியதாவது: கர்நாடகாவில் முதல் நாள் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் குறைந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடிந்தது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட சில தினங்களுக்கு பிறகே தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இது முதல் நாளில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல இதை அரசுக்கு எதிராக திருப்பி விட்டன. மது ஆலை நடத்துபவர்களும், மதுக்கடை சார்ந்து வேறு தொழிலை செய்பவர்களும் இங்கே மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று போலியாகக் குரல் கொடுப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்களும், டிடிவி தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்களும் மது ஆலை நடத்தி பணம் கொழிப்பது ஊருக்கே தெரியும். இன்னொரு புறம் மது விற்பனை கூடாது என்று இவர்கள் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போலத்தான்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த் தனது ஆரம்பகால பேட்டிகளில் தான் மது குடிப்பவன் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். மதுவுக்கு எதிராக இப்போது பேசும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் இரவில் கிளப், ஓட்டல் உள்ளிட்டவற்றில் குடிப்பவர்கள்தான். இதை அவர்களின் குடும்பத்தினரும், நெருக்கமான கட்சிக்காரர்களும் நன்றாக அறிவார்கள். இவர்களெல்லாம் மதுவின் கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது.
இதைப் பார்க்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஜே.எச்.படேல் முதல்வராக இருந்தபோது பாஜக எம்எல்ஏ பிரமிளா நேசர்கி, மது விலக்கு கோரி தீர்மானம் கொண்டு வர முயன்றார். அவரதுஉருக்கமான பேச்சுக்கு ஏறக்குறைய அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலை அசைத்து கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்த ஜே.எச்.படேல் எழுந்து, “நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாகஅரசியலில் இருக்கிறேன். இப்போது முதல்வராகவும் ஆகிவிட்டேன். நான் தினமும் இரவில் குடிப்பவன் என்பது இங்குள்ள பலருக்கும் தெரியும். சில காலம் குடிக்காமல் இருந்தேன். அப்போது எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்தேன். இங்குள்ள சில அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்களும் என்னோடுசேர்ந்து குடித்திருக்கிறார்கள்.
இங்கிருக்கும் சட்டப்பேரவையில் இருக்கும் உறுப்பினர்களில் எத்தனை பேர் குடிப்பீர்கள்? என்ன குடிப்பீர்கள்? கடைசியாக எப்போது குடித்தீர்கள் என்பது கூட எனக்கு தெரியும். உங்களில்குடிக்காதவர்கள் கையை தூக்குங்கள். அவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன் ‘’என்றார். பேரவையில் அதிகபட்சம் 20 பேர்தான் கையை தூக்கினர்.
கரோனா நிவாரணப் பணிகள் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி இருக்கிறது. மதுக்கடைகளைத் திறப்பதா வேண்டாமா என்ற அரசின்கொள்கை முடிவைப் பற்றி இவர்களுக்குப் பேசத் தகுதி இல்லை. தனது தரப்பில் உள்ள நியாயத்தை நீதிமன்றத்தில் அரசு சொல்லும். வாக்கு அரசியலுக்காக கூவும் இந்த உத்தமர்கள் அமைதியாக இருப்பதே அவர்களுக்கு நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.