

ஆரோக்கிய சேது செல்போன் செயலி மூலம் கரோனா வைரஸ் பரவி வரும் 300 புதிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆரோக்கிய சேது செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 9 கோடிபேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் செல்லும்போது ஆரோக்கிய சேது செயலி எச்சரிக்கை விடுக்கும்.
இந்த செயலி குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவிவரும் 650 பகுதிகள் ஏற்கெனவேஅடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தடை செய்யப்பட்டபகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவி வரும் புதியபகுதிகளை ஆரோக்கிய சேது செயலி மூலம் எளிதாகக் கண்டறிய முடிகிறது. அந்த வகையில் இந்தசெயலி மூலம் புதிதாக 300 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆரோக்கிய சேதுவை பதிவிறக்கம் செய்தவர்களில் 34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் எந்தப்பகுதியில் அதிக பரிசோதனைகளை நடத்த வேண்டும். யாருக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்கிறோம்.
செயலியில் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 65 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு சுகாதார துறை ஊழியர்கள் நேரில்சென்று விசாரித்தனர். இதில் 16,000 பேருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 12,500 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. இந்த செயலியில் கூடுதலாக 10 மொழிகள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
10 மாநிலத்தில் பாதிப்பு இல்லை
டெல்லி மண்டோலி பகுதியில் உள்ள கரோனா வைரஸ் நல மையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "நாடு முழுவதும் 4,362 கரோனா வைரஸ் நலமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு லேசான கரோனாவைரஸ் அறிகுறி உள்ள 3,46,856நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் ஒருவருக்கு கூடகரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை" என்றார்.