Published : 11 May 2020 06:53 AM
Last Updated : 11 May 2020 06:53 AM

எவரெஸ்ட் சிகரம் திபெத்தில் உள்ளதா?- சீனாவுக்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், திபெத்தில் அமைந்திருப்பதாக சீன அரசு பொய் செய்தியை பரப்பி வருகிறது. இதற்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர் மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதனை ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் அரசு தொலைக்காட்சியான சிஜிடிஎன் சேனலின் ட்விட்டர் கணக்கில் கடந்த மே 2-ம் தேதி ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில்,சீன ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இந்தியா, நேபாள மக்கள் சமூக வலைதளம் வாயிலாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேபாளத்தை சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரம் சீன எல்லைக்குள் இருப்பதாக பொய் செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள்’’ என்று கண்டித்துள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த மற்றொருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எவரெஸ்டை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சீனாவுக்கு எதிராக நேபாள அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் காந்த் கூறும்போது, ‘‘சீனாவின் திபெத் எல்லைப் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் வழி கடினமானது, செங்குத்தானது. இதனால் அங்கு சுற்றுலா தொழில் செழிப்பாக இல்லை. நேபாளம் வழியாகவே எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்ற வீரர்கள் செல்கின்றனர். எனவே எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நேபாள எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க சீன அரசு முயற்சிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

எவரெஸ்ட் விவகாரத்தில் இந்தியா, நேபாளம் மட்டுமன்றி உலகம் முழுவதும் சீனாவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், எவரெஸ்ட் சிகரத்தில் பிரதிபலித்த சூரியனின் ஒளிவட்ட புகைப்படங்களை சிஜிடிஎன் சேனல் ட்விட்டரில் நேற்று வெளியிட்டது. அதில் எவரெஸ்ட் சிகரம் சீன - நேபாள எல்லையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ‘‘எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. சீன - நேபாள எல்லையில் இல்லை’’என்று ஏராளமானோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் சீன ஆதிக்கத்தில் இருந்து திபெத் விடுதலை பெற வேண்டும் என்ற குரலும் சமூக வலைதளத்தில் ஓங்கி ஒலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x