

வெளிநாடுவாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் பணியின் நான்காவது நாளான இன்று தோஹாவிலிருந்து புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மாற்றப்படும் விமானத்தின் பயண அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏர் இந்தியா மே 7 முதல் மே 13 வரை முதல் வாரத்தில் 64 விமானங்களை இயக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மே 9 அன்று ஒருநாளில் துபாய், குவைத், மஸ்கட், ஷார்ஜா, கோலாலம்பூர் மற்றும் டாக்கா ஆகிய நாடுகளில் இருந்து எட்டு வந்தே பாரத் விமானங்கள் இந்தியாவில் வந்தடைந்துள்ளன. இதன்மூலம் 1373 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷனின் நான்காவது நாளான இன்று. லண்டனைச் சேர்ந்த 326 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மும்பை வந்தடைந்தது.
வழக்கமான அட்டவணைப்படி மிகச்சரியாக திட்டமிட்டபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து புறப்பட வேண்டிய விமானத்தில் சிறு மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
''தோஹாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐஎக்ஸ் 374, முன்னதாக தோஹாவின், சுந்தா விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணியளவில் திருவனந்தபுரத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் விமானம் தோஹாவிலிருந்து புறப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம், திருத்தப்பட்ட அட்டவணை பின்னர் புதுப்பிக்கப்பட்டு அறிவிக்கப்படும்'' என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.