

டெல்லியில் சிக்கியுள்ள 9,500 தொழிலாளர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புங்கள், ரயில் கட்டணத்தை ஏற்கிறோம் என்று டெல்லி முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த மே 1 முதல் ஷ்ராமிக் ரயில்கள் மூலம் நாடெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி மாநில அரசு அவர்களின் பயணச் செலவை ஏற்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஇடங்களுக்கு செல்வதற்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் இச்செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
கடந்த சில நாட்களில் டெல்லி அரசாங்கம் பிஹாரில் இருந்து 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், மத்திய பிரதேசத்திலிருந்து 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கும் டெல்லி திரும்புவதற்கான ரயில் பயணத்தை ஏற்பாடு செய்தது.
டெல்லியைப் பொறுத்தவரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முதல்ரயில் வியாழன் இரவு மத்தியப் பிரதேசம் புறப்பட்டது. ஆனால் இன்னும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த ஏற்பாடும் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார், முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 2,106 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டியல் ஒன்றும் 7,299 தொழிலார்களின் மற்றொரு பட்டியலும் என இரண்டு பட்டியல்களை அனுப்பிவைத்துள்ளார். அத்துடன் ஏற்பாட்டைச் செய்யுங்கள் செலவை நாங்கள் ஏற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அனில்குமார் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் கிட்டத்தட்ட 9500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் அவர்களின் இரண்டு பட்டியல்களை தங்களுக்கு அனுப்பிவைத்துள்ளேன். டெல்லி காங்கிரஸிடம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல ரயில் டிக்கெட்டுகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோரியுள்ளனர். அவர்களின் ரயில் கட்டணத்தை செலுத்த காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. இதற்கான நிதி உதவிக்காக கட்சியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சுமுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு முறையான ஏற்பாடுகளை டெல்லி அரசு உடனே செய்யவேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் டெல்லி காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீர்மானித்தபடி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும்.
இவ்வாறு டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் கேஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் தெரிரிவித்துள்ளார்.
செலவை டெல்லி அரசு ஏற்க உள்ளதாக தகவல்
இதற்கிடையே டெல்லி அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணச் செலவை அவர்களின் சொந்த மாநிலங்கள் பதிலளிக்காவிட்டால் அவர்களின் பயணச் செலவை தாங்களே ஏற்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
டெல்லியில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பட்டியலுடன் டெல்லி அரசு ஏற்கனவே அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதகாவும், பயணச் செலவுகளைச் சமாளிப்பது குறித்து இந்த மாநிலங்களில் பெரும்பாலானவை இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள டெல்லி அரசு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு மேலும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக செலவை தாங்களே ஏற்க முடிவு செய்துள்ளதாகவும் டெல்லி அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.