

எனது வாழ்க்கையில் எனது தாயார் உண்மையாக உணர்த்திய தைரியமும் உறுதியும் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்ததுதான், எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து. என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அன்னையர் தினத்தன்று தனது தாயை நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் பெற்ற தாய்க்கு பெருமைக்கு சேர்க்கும்விதமாக அமெரிக்காவில் ஜார்விஸ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த புனித தினம். அன்னையர் தினத்தில் தனது தாயை நினைவுகூர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அரசியல் வாழ்க்கைக்கே அடித்தளம் தனது அம்மாதான் என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:
'' பெரும்பாலான மக்களைப் போலவே, என் தாயும் என் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார். சில காரணங்களால் என் அம்மா குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அம்மா அந்த பொறுப்பை தைரியத்துடன் நிறைவேற்றினார். தன்னுடைய பதினான்கு குழந்தைகளில் பதினொன்றை அவர் இழந்தார். கல்யாணியின் இளைய மகனாக நான் வளர்ந்தேன். வாழ்க்கையில் உள்ள அனைத்து சிரமங்களையும் சமாளிக்க என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
நாடு கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, நாம் அனைவரும் அதைக் கடக்க வேண்டும் என்பது அசாதாரண ஆற்றலாக இருக்கும். நம் நினைவுகளில் தாய்மார்கள் நீண்ட காலமாக இருப்பதால், தியாகம் மற்றும் சுயநிர்ணயத்தின் உதாரணங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. இந்த அன்னையர் தினத்தன்று, நான் என் அம்மாவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
எனது வாழ்க்கையில் எனது தாயார் உண்மையாக உணர்த்திய தைரியமும் உறுதியும் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்ததுதான், எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது.
அனைத்து தாய்மார்களுக்கும் நன்றி. தாய்மையின் உறுதியான அம்சங்களான தியாகம், கருணை மற்றும் தைரியத்தை அரவணைத்துக்கொள்வதன்மூலம் இந்த நேரத்தில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.