

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பிரிட்டனில் சிக்கித் தவித்த இந்தியர்களி்ல் 326 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று காலை மும்பை அழைத்துவரப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் பெரிய சிரமத்துக்குள்ளாகினர். வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் நோக்கில் வந்தேபாரத் மிஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி, ஒவ்வொரு நாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருகிறது
கடந்த 7-ம் தேதி முதல் கேரளா, தமிழகம், தெலங்கானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களி்ன் முக்கிய நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதுவரை கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரி்ட்டனில் தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 326 பேர் மட்டும் லண்டனில் இருந்து ஏர் இந்்தியா விமானம் மூலம் இன்று காலை மும்பை அழைத்துவரப்பட்டனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு மும்பை சத்ரபதி சர்வதேச விமானநிலையத்தில் இந்த விமானம் வந்து சேர்ந்தது.
இதுகுறித்து ஒரு பயணி ட்விட்டரில் பதிவிடுகையில் “ 326 பயணிகளுடன் லண்டனிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பையில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த ஊழியர்கள் அதிகமாக பயணிகளுடன் பேசவில்லை, பயணிகளுக்கு முகக்கவசம், உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன. அடுத்ததாக பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்
மற்றொரு பயணி ட்விட்டரில் குறிப்பிடுகையில் “ பிரிட்டனில் இருந்து பாதுகாப்பாக மும்பை வந்து சேர்ந்தோம். இந்திய அரசுக்கும், பிரிட்டன் அரசுக்கும், பாதுகாப்பாக சேர்த்த ஏர்இந்தியாவிமானிகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு வந்த பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், இவர்களில் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமை முகாமுக்கு அனுப்பப்படுவார்கள். அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு மகாராஷ்டிரா அரசு மூலம் அனுவப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்