

குஜராத்தில் கரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து குஜராத்துக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்யுமாறு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா (நுரையீரல் நோய் நிபுணர்), மற்றும் டாக்டர் மணீஷ் சுரேஜா ஆகிய இருவரும் குஜராத் விரைந்தனர். அகமதாபாதில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று சென்ற குலேரியா, அங்கு டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சிகிச்சை பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார். அகமதாபாதில் உள்ள எஸ்விபி மருத்துவமனைக்கும் சென்று எய்ம்ஸ் டாக்டர்கள் ஆய்வு நடத்தி ஆலோசனைகளை வழங்கினர். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குலேரியா, குஜராத் முதல்வர் விஜய் ருபானி, தலைமைச் செயலர் உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்
குஜராத் மாநிலத்தில் கரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 7,402 ஆகும். இவர்களில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். 1,872 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.