

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப் பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகள் வருமான வரி விலக்குப் பெற தகுதியானவை என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது
இதுகுறித்து நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பில், “அயோத்தியில் கட்டப்படும் கட்டிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் அந்த இடம், 1961-ம் ஆண்டு வருமான வரிகள் சட்டம் 80-ஜி பிரிவின் கீழ் வரும் பொது வழிபாட்டுத் தலம் என்பதாலும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெற மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
வரிவிதிப்புக்கு உட்பட்ட வருமானத்தை கணக்கிடுவதற்கு முன்பு, குறிப்பிட்ட நிவாரண நிதி மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் நன்கொடைகளை மொத்த வருமானத்தில் கழிப்பதற்கு வருமான வரிச் சட்டத்தின் 80-வது பிரிவு அனுமதி அளிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இப்பணிக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.