

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி திருப்பதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில், தொண்டர் ஒருவர் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நேற்று திருப்பதி மாநகராட்சி அலுவலகம் அருகே மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில், 'போரு சபா' எனும் பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசியதாவது:
மாநில பிரிவினையின் போது டெல்லியில் மக்களவையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆந்திர மாநிலத்துக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய மத்திய அமைச்சர், வெங்கய்ய நாயுடு, 5 ஆண்டுகள் போதாது, 10 ஆண்டுகள் வரை சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென கடுமையாக வாதாடினார்.
ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள பாஜக சிறப்பு அந்தஸ்து வழங்க முன்வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிக்கிறார். முதல்வர் சந்திரபாபு நாயுடு இதனை தட்டிக் கேட்க ஏனோ தயங்குகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது உரிமையாகும். இதனை கேட்க ஏன் சந்திரபாபு நாயுடு தயங்குகிறார் என்பது தெரியவில்லை.
சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக வரும் 11ம் தேதி நடைபெறும் பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு சிரஞ்சீவி பேசினார்.
இந்த பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் இருந்த திருப்பதி மஞ்சால வீதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் முனிகோட்டி(43) என்பவர், திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அவர் உடனடியாக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 80 சதவீத அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.