Published : 10 May 2020 06:42 AM
Last Updated : 10 May 2020 06:42 AM

விஷவாயு கசிவால் 12 பேர் உயிரிழக்க காரணமான எல்ஜி தொழிற்சாலையை மூட வலியுறுத்தி சடலங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் விஷவாயு கசிந்ததால் 12 பேர் உயிரிழக்கக் காரணமான எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் சடலங்களோடு பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பாலிஸ்டெரெய்ன் விஷவாயு கசிந்தது. இதனால் ஆர்.ஆர்.வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 12 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

விஷவாயுவை சுவாசித்த சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது சிகிச்சைபெற்று வரும் 400-க்கும் மேற்பட்டோர் பலவித பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 5 பேரின் உடல்களை பெற்றுக்கொண்ட உறவினர்கள், சடலங்களுடன் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை வளாகத்துக்கு சென்றனர். அங்கு ஆர்.ஆர். வெங்கடாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடிய இந்த தொழிற்சாலையை உடனடியாக மூடவேண்டும்” என கோஷமிட்டனர். சடலங்களுடன் தொழிற்சாலைக்குள் நுழைய முயன்றவர்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங் தொழிற்சாலையை ஆய்வு செய்ய அங்குவந்தார். அவரிடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முறையிட்டனர். சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் தொழிற்சாலை நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட ஏன் கைதுசெய்ய வில்லை என கேள்வி எழுப்பினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீஸார் டிஜிபியை பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்களிடம் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தெலுங்கு தேசம் வலியுறுத்தல்

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அச்சம் நாயுடு கூறுகையில், ‘‘அரசுஅறிவித்தபடி ஒரு கோடி ரூபாயைஉயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு விரைவில் வழங்க வேண்டும். இந்த தொகையைப்போல மேலும் 10 மடங்கு நஷ்ட ஈடு நிதியை எல்ஜி பாலிமர்ஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.

மவுனம் கலைத்த எல்ஜி பாலிமர்ஸ்

விஷவாயு கசிந்த சம்பவம் குறித்து எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் 3 நாட்களாக மவுனம் காத்துவந்தது. இந்நிலையில், அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுகுறித்து விசாரணைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள்அமைத்துள்ள அனைத்து விசாரணை குழுக்களுக்கும் முழு ஒத்துழைப்புதரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x