Published : 09 May 2020 09:41 PM
Last Updated : 09 May 2020 09:41 PM

வந்தேபாரத் மிஷன்: இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள்; முழு விவரம்

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, 10 நாடுகளில் உள்ள 15000 இந்தியர்களை மே 7 முதல் 13-ஆம்தேதி வரை, 64 விமானங்கள் மூலம் கொண்டு வருவதற்காக வந்தே பாரத் இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர், ரியாத், லண்டன், டாக்கா, கோலாலம்பூர் போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் இருந்து, சென்னை, திருச்சி, மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இந்திய நகரங்களுக்கு இந்தியர்களைக் கொண்டு வருவதற்காக, 41 ஏர் இந்தியா விமானங்கள், 27 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஒரு வார காலத்துக்கு இயக்கப்படுகின்றன.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல நாடுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களைத் தாயகத்துக்கு திரும்ப அழைத்து வருவதை வந்தே பாரத் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும், தாய்நாட்டில் உள்ள அவர்களது உற்றார், உறவினருக்கும் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. அபுதாபி மற்றும் துபாயிலிருந்து இரண்டு விமானங்கள் மே 7-ஆம் தேதி கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் வந்து இறங்கியது முதல், வந்தே பாரத் இயக்கம் தொடங்கியுள்ளது.

இயக்கத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, 152 பயணிகள், 25 குழந்தைகள், 5 பச்சிளம் குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி சர்வதேச விமானநிலயத்தில் வந்திறங்கியது. வந்தே பாரத் இயக்கம் மிகவும் விரிவான அதே நேரம் சிக்கலான வெளியேற்றத் திட்டமாகும். இந்த இயக்கம் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருவதுடன் நில்லாமல், அவர்களைப் பரிசோதனை செய்து ,தனிமைப்படுத்தி, இதர ஏற்பாடுகளைச் செய்வது வரை நீடிக்கிறது. இதனை குடிமக்களுக்காக அரசு மேற்கொள்கிறது.

பிலிப்பைன்சின் மணிலாவில் தவிக்கும் இந்தியப் பயணிகளை மே 14-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஏற்றிக் கொண்டு மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு சென்னை வந்து சேரும். பங்களாதேஷின் டாக்காவிலிருந்து மற்றொரு விமானம் அதே நாளில் சென்னை வந்து சேரத் திட்டமிடப்பட்டுள்ளது. கொச்சியிலிருந்து சென்னைக்கு மே 12-ஆம் தேதியும், மே 13-ஆம் தேதி மும்பையிலிருந்து சென்னைக்கும், பின் திரும்பவும் விமானங்கள் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த அனைத்து விமானங்களும் கடைசி நேர மாற்றத்துக்கு உட்பட்டவை என அதிகாரிகள் கூறியுள்ளனர். 23 விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய நகரங்களுக்கு சேவையை மேற்கொள்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அட்டவணை தெரிவிக்கிறது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மே 9-ஆம் தேதி சனிக்கிழமை ஒரு விமானம் வரவிருக்கிறது. மற்றொரு விமானம் சிங்கப்பூரிலிருந்து மே 10-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு திருச்சி வந்தடையத் திட்டமிட்டுள்ளது.

மே 10-ஆம் தேதி, துபாயிலிருந்து இரண்டு விமானங்களும், குவைத்திலிருந்து ஒரு விமானமும், மே 11-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ஒரு விமானமும், மே 12-ஆம் தேதி மஸ்கட்டிலிருந்து ஒரு விமானமும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னைக்கு இயக்கத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் 177 குறைந்த கட்டண இருக்கைகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x