Published : 09 May 2020 05:20 PM
Last Updated : 09 May 2020 05:20 PM

கரோனாவுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரும் சமஅளவில் பங்காற்றுகிறார்கள்: முக்தார் அப்பாஸ் நக்வி

புதுடெல்லி

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் சமுதாயத்தின் அனைத்து மக்களுடன் இணைந்து சிறுபான்மையின சமூகத்தினரும் பங்காற்றி வருவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1500க்கும் மேற்பட்ட சுகாதார உதவிப்பணியாளர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது; அவர்களைக் கவனித்துக் கொள்வது ஆகியவற்றில் உதவி புரிந்து வருகிறார்கள்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவி வரும் இந்த சுகாதார உதவிப் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்றும் நக்வி கூறினார். இந்த ஆண்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார உதவிப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். நாட்டிலுள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மூலமாகவும் சுகாதார உதவிப் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பயிற்சியை அமைச்சகம் வழங்கி வருகிறது.

கரோனா நோய் எதிர்ப்புக்கென பல்வேறு மத சமூக கல்வி அமைப்புகளின் ஆதரவுடன், நாட்டிலுள்ள பல்வேறு வக்ஃப் வாரியங்கள் மூலமாக பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதியங்களுக்கு 51 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த வாரியங்கள், தேவைப்படும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் உணவுப் பொருள்களையும் வழங்கி வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதற்காகவும், தனித்திருக்கச் செய்வதற்காகவும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக நாட்டிலுள்ள 16 ஹஜ் இல்லங்கள், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் தேவைக்கேற்ப இந்த ஹஜ் இல்லங்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU), பிரதமரின் PM CARES நிதியத்திற்கு 1.40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின், அலிகர் மருத்துவக் கல்லூரி 100 படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. பரிசோதனைக்கும் AMU ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 9000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆஜ்மீர் ஷரீப் தர்காவில் உள்ள காயத் விஷ்ராம்ஸ்தலி க்வாஜா மாடல் பள்ளியிலும் தனிமைப்படுத்தும் மற்றும் தனித்திருக்கும் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கக் காலத்தின் போது, நாட்டின் அனைத்து மதங்களையும் சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட ஜெயரின்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டன. தர்கா கமிட்டி, தர்கா காதிம்கள் மற்றும் சஜ்ஜதா-நஷின் மூலமாக இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பிற இடங்களில் தங்க நேர்ந்துவிட்ட மக்களை தத்தமது மாநிலங்களுக்கு அனுப்புவது உட்பட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ஏற்பாடுகளை, தர்கா கமிட்டி மற்றும் இதர கூட்டு அமைப்புகள் செய்து கொடுத்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

***

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x