ஏழைகளுக்குக் கொடுங்கள்; மத்திய அரசு கூடுதலாக ரூ.4.2 லட்சம்  கோடி கடன் பெறுவதை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப் படம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப் படம்.
Updated on
1 min read

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க கூடுதலாக ரூ.4.20 லட்சம் கோடி கடன் பெற இருக்கும் முடிவை வரவேற்கிறேன். இந்தப் பணத்தை ஏழைகளுக்கு நிவாரணமாக வழங்கி பொருளாதாரத்தை உந்தித் தள்ளுவதற்கான செயல்பாட்டிற்கும் செலவிடுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் திட்டமிடப்பட்ட கடன்பெறும் அளவு ரூ.12 லட்சம் கோடியாக இருக்கும். கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வை ஈடுகட்டும் வகையிலும், பொருளாதார மீட்சிக்காகவும் கடன் பெறும் அளவைத் திருத்தியுள்ளோம் என மத்திய அரசு நேற்று அறிக்கையில் தெரிவித்தது.

மத்திய அரசின் செயல்பாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார. அதுகுறித்து அவர் வெளிியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''நாங்கள் தொடரந்து விடுத்த கோரிக்கைகளை எதிர்த்தாலும், இறுதியாக மத்திய பொருளாதார விவகாரத்துறை, ரூ.7.80 லட்சம் கோடியிலருந்து கூடுதலாக ரூ.4.20 லட்சம் கோடி கடன் பெற முடிவு செய்து, நிதிப்பற்றாக்குறையை 5.38 சதவீதமாக இலக்கு வைத்துள்ளது. இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.

இந்தத் தொகை போதாது. இன்னும் அதிகமாகக் கடன் பெறாவிட்டால் ஏழைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவும், பொருளாதாரத்தை மீண்டும் இயக்கவும் இயலாது. 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திருத்தப்பட்ட செலவினத்தை எதிர்பார்க்கிறோம். நாங்கள் கூறிய கருத்தைத்தான் உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களும் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு அதிகமாகக் கடன் பெறலாம் எனப்பரிந்துரைத்தார்கள்.

எங்கள் கண்ணோட்டத்தின்படி, பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதம் என்பது இதுபோன்ற அசாதாரண சூழலில் நாம் பின்பற்றக்கூடாது''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in