Last Updated : 09 May, 2020 08:56 AM

 

Published : 09 May 2020 08:56 AM
Last Updated : 09 May 2020 08:56 AM

லாக்டவுன் துயரம் | 16 தொழிலாளர்கள் பலியான அவுரங்காபாத் சரக்கு ரயில் விபத்து: ஒரு போன்கால் 16 உயிர்களைக் காப்பாற்றியிருக்கும்

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே பத்னாபூர்-கர்மாட்ரயில் நிலையங்களுக்கு இடையேநேற்று காலையில் சரக்கு ரயில் மோதியதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் இருப்பது தெரிந்ததும் என்ஜின் ஓட்டுநர் அவர்களை ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் ரயிலை நிறுத்தவும் அவர் முயற்சி செய்துள்ளார். ரயிலை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அதற்குள்ளாக விபத்து நடந்துவிட்டது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா ஜல்னாவில் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைய மாலை 7 மணிக்கு கால்நடையாகவே புறப்பட்டனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் அவர்கள் ஓய்வு எடுத்த போதுதான் ரயிலில் அடிபட்டு இறந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் இருமாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மையையும் அலட்சியத்தையும் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இவர்கள் ஒருவாரம் முன்பாக தங்கள் ஊர்களுக்குத் திரும்ப பாஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர், ஆனால் ஒருபதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்து கால்நடையாகவே கிளம்பியுள்ளனர்.

7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அதாவது முதன்மைச் செயலர் அளவுக்கு உயர்பதவி ஐஏஎஸ் அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் பணியில் பொறுப்பு வகித்தனர்.

இவர்கள் யாரும் போனைக் கூட எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் வேதனை தெரிவித்தார்.

“ம.பி. அரசு இந்த புலம்பெயர் தொழிலாளர்களைப் பதிவு செய்ததா? ஆம் என்றால் அவர்களை மீண்டும் மாநிலத்துக்கு அழைத்து வர என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் பதிலளிக்க வேண்டும், இல்லையெனில் அவமானப்படுவார். சும்மா மீடியாக்களிடம் தினமும் எதையாவது கூறிக்கொண்டிருக்கிறாரே தவிர வேறு என்ன செய்கிறார்?” என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.”

ஒரு போன்கால் இவர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x