

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரி்லிருந்து தனது நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்த தகவலை மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:
கில்ஜித்-பல்டிஸ்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனர்கள் நடமாட்டம் இருப்பதாக செய்திகள் வந்துள்ளதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி சீனாவிடம் கவலை தெரிவித்துள்ளது இந்தியா என்றார்.
இன்னொரு பதிலில் அவர் கூறியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியல் சீன கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் அதிக அளவில் வருவது பற்றிய செய்திகளையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கடல்கொள்ளை தடுப்புக்காக ஏடன் வளைகுடா பகுதியில் 2009ம் ஆண்டு ஜனவரியிலிருந்து தமது கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளது. இதுவரை 20 முறை இந்த கப்பல்கள் சென்றுள்ளன என்றும் பாரிக்கர் தெரிவித்தார்.