

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தின வருகிறார். அவர் இன்று தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபேயும் இந்த ஆலோசனையில் பங்கேற்றார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து கேட்டறிந்தார். மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை இருப்பு குறித்தும், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய உதவி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.