

லாக்டவுனை எவ்வாறு தளர்த்தப் போகிறீர்கள் என்ற திட்டத்தை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முதலாளி மனப்பான்மையில் பேசாமல் சக ஊழியரைப் போல் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் மார்ச் 25-ம் தேதி கொண்டுவரப்பட்டு 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட லாக்டவுன் வரும் 17-ம் தேதி முடிகிறது. லாக்டவுனை மத்திய அரசு எவ்வாறு தளர்த்தப்போகிறது, பொருளாதாரத் திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து விரிவாக விளக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார்
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொலி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸ் முதியோருக்கும், நீரிழிவு நோய், இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு தற்போது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. மக்கள் மனதில் உளவியல்ரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியம். மத்திய அரசு லாக்டவுனைத் தளர்த்த விரும்பினால், மக்களிடம் தற்போது இருக்கும் அச்சம் நம்பிக்கையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் லாக்டவுனனைத் தளர்த்தியவுடன் மக்கள் வெளியே வந்துவிடுவார்கள்.
நாம் நியாயமாகப் பேசினால், நாம் இப்போது இயல்பான சூழலில் வசிக்கவில்லை. ஆதலால், இயல்பான முடிவு எடுக்க முடியாது. ஆதலால் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவில் பிரித்து வழங்கினால்தான் கரோனாவை வெல்ல முடியும். இன்னும் அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கரோனா போரில் தோற்றுவிடுவோம். பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் லாக்டவுனைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மாவட்ட அளவில் ஆட்சியர்களுடன் பேச வேண்டும். ஒரு சக ஊழியரைப் போல் பிரதமர் மோடி பேச வேண்டுமே தவிர, முதலாளி மனப்பான்மையில் பேசக்கூடாது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உட்கட்சி அளவில் லாக்டவுனைத் தளர்த்துவது குறித்து ஆலோசித்திருக்கிறோம். 45 நாட்கள் லாக்டவுனில் இருக்கிறோம், பிரச்சினையில் இருக்கிறோம். சிறு, குறு தொழில்களுக்கு பொருளாதார நிதித்தொகுப்பு, மக்கள் கைகளில் பணத்தை வழங்குதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி போன்றவற்றை வழங்கி லாக்டவுனைத் தளர்த்தத் தயாராவது அவசியம்.
லாக்டவுனைத் தளர்த்துவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். எப்போது லாக்டவுன் தளர்த்தப்படுகிறது, என்ன அளவுகோலில் லாக்டவுன் தளர்த்தப்படுகிறது, எந்தத் தொழில்கள் இயங்கும், எதை இயக்க அனுமதிக்கப்படும் என்பது குறித்த திட்டம் வேண்டும்.
இதை மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பது அவசியம். இது மக்களுக்குப் புரிய வேண்டும். லாக்டவுனில் சிரமப்பட்ட மக்களுக்கு உதவி மட்டும் அளித்துவிட்டுச் செல்லுதல் கூடாது.
இது விமர்சிப்பதற்கான நேரம் அல்ல, நான் அரசை விமர்சிக்கவும்மாட்டேன். இப்போதுள்ள இக்கட்டான சூழலிலிருந்து நாம் வெளியேற வேண்டும். நாட்டில் சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்களில் உள்ள தொழில்கள் இயங்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்களிடம் சக ஊழியர்கள் போல் பிரதமர் மோடி பேசிக் கலந்தாய்வு செய்ய வேண்டும். பணப் பரிமாற்றத்தைப் பற்றிப் பேசி வருகிறோம். புலம்பெயர்ந்தவர்களுக்குப் பணம் அவசியம். நாட்டு மக்களில் 50 சதவீதம் பேருக்கு பணத்தை நேரடியாக அரசு வழங்கிட வேண்டும், நியாய் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
பிரதமர் மோடி அவருக்கே உரிய வழியில் செயல்படுகிறார், செயல்படட்டும். இந்த நேரத்தில் பல வலிமையான மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பிரதமர் இணைந்து செயல்பட வேண்டும். இப்போதுள்ள நிலையில் பச்சை, சிவப்பு மண்டலங்களை மத்திய அரசு முடிவு செய்கிறது, பச்சை மண்டலம் சிவப்பாகவும் குறிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதை மாநில அரசுகள் வசம் விட்டுவிடுங்கள். மாநில அரசுகளுக்குப் போதுமான நிதியை வழங்கிடுங்கள்''.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.