

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்து சென்றபோது உடல் அசதியால் தண்டவாளத்தில் அயர்ந்து தூங்கினர். அப்போது அவ்வழியே இன்று காலை வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.
இந்தச் சம்பவத்தில் இரு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த ஒரு மாதமாக சொந்த மாநிலம் செல்ல முடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலத்துக்கும் செல்கின்றனர்.
இதில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாகச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை அந்தத் தொழிலாளர்கள் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கினர்.
இன்று காலை 5.30 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஜல்சான் போலீஸ் அதிகாரி சந்தோஷ் கேத்மாலா கூறுகையில், “ஜல்கானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் பணிபுரிந்து வந்தனர். லாக்டவுன் காரணாக தொழிற்சாலை மூடப்பட்டதால், சொந்த மாநிலத்துக்கு நடந்தே சென்றனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியபோது அவர்கள் மீது ரயில் ஏறியது.
இந்தச் சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவுரங்காபாத் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்தத் துயர விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி என்னை வேதனைப்படுத்துகிறது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். அவர் இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் கண்காணித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.