

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் 363 இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களை அழைத்துவர முதல்கட்டமாக ஏர் இந்தியாவின் இரு விமானங்கள் சென்றன. அந்த விமானங்கள் நேற்று நள்ளிரவில் கொச்சி, கோழிக்கோடு வந்தடைந்தன.
வந்தே பாரத் மிஷன் என இந்தியர்களை அழைத்துவரும் இந்தத் திட்டத்தில் 9 பச்சிளங்குழந்தைகள் 40-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் என 363 பயணிகள் இருந்தனர். இதில் அபுதாபியிலிருந்து புறப்பட்ட முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 4 பச்சிளங்குழந்தைகள் உள்பட 177 பயணிகள் இரவு 10.09 மணிக்கு கொச்சி விமானநிலையம் வந்தடைந்தனர். துபாயிலிருந்து புறப்பட்ட 2-வது விமானம் அடுத்த 30 நிமிடங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 10.32 மணிக்குத் தரையிறங்கியது.
இதில் இரு விமான நிலையங்களிலும் வந்திறங்கிய பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்பே தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த இரு விமானங்களிலும் மொத்தம் 48 கர்ப்பிணிகள் இருந்தனர். கர்ப்பிணிகள், 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு விமான நிலையம் சார்பில் தனியார வாடகை கார் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரு விமான நிலையங்களிலும் சேர்த்து கேரள அரசு சார்பில் 8 அரசுப் பேருந்துகள், 40 வாடகைக்கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்த்து அனைத்துப் பயணிகளும் திருச்சூர், குருவாயூரில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் முகாமுக்கு அரசுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், குருவாயூர், திருச்சூர் தனிமை முகாமுக்குச் செல்ல விருப்பம் இல்லாத பயணிகள் தாங்கள் சார்ந்திருக்கும் மாவட்ட நிர்வாகத்திடம் சென்று தகவல் தெரிவித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமை முகாமில் தங்க அறிவுறுத்தப்பட்டனர்.
அனைத்துப் பயணிகளும் கேரளா வந்திறங்கியுடன் தங்களின் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து வந்த விமானிங்கள், ஊழியர்களுக்கும் பிபிஇ ஆடை வழங்கப்பட்டிருந்தது.
துபாய், அபுதாபியிலிருந்து விமானங்கள் புறப்பட்டவுடன் பயணிகள் அனைவருக்கும் ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் இருமுகக்கவசம், சானிடைசர், உணவுப்பொருட்கள், கேக், பழரசம், சாண்ட்விச் போன்றவை வழங்கப்பட்டன.
இதில் இரு விமான நிலையங்களிலும் வந்திறங்கிய பயணிகளைப் பரிசோதித்ததில் அவர்களில் 5 பேருக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடந்தது. கரோனாவால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.
இதில் மற்ற பயணிகள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமை முகாமிலோ அல்லது திருச்சூர், குருவாயூரில் உள்ள தனிமை முகாமிலோ 14 நாட்கள் தங்க வேண்டும். இதில் முதல் 7 நாட்கள் பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால் பயணிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. 502 நோயாளிகளில் 474 பேர் குணமடைந்தனர், 25 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.