சீனாவில் இருந்து வெளியேறும் 1,000 வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க திட்டம்: பிரதமர் மோடி தீவிர பேச்சுவார்த்தை

சீனாவில் இருந்து வெளியேறும் 1,000 வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க திட்டம்: பிரதமர் மோடி தீவிர பேச்சுவார்த்தை
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலுக்கு சீனா பிரதான காரணமாக அமைந்துள்ளதால் அங்கிருந்து பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்துள்ளன. சுமார் 1,000 -த்துக்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான அமெரிக்காவின் அபோட் நிறுவனமும் இதில் அடங்கும். இத்தகைய நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை இந்தியா முழுவீச்சில் செயல்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல் துறை, ஜவுளி, தோல் தொழில் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட 550 தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் நாடுகளிடையே வர்த்தகத்தை பாதிப்பதோடு நாடுகள் இடையிலான உறவையும் வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது. சீனாவில் இருந்து வெளியேறி தங்கள் நாடுகளில் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசு 220 கோடி டாலரை ஒதுக்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்குமாறு தனது உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலையை தொடங்கும் போது ஓரளவு போக்க முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கருதுகிறார்.

வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இங்கு ஆலை அமைக்க நிலம்கிடைப்பது, திறன் மிக பணியாளர்கள் கிடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க மாநில முதல்வர்களிடமும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in