

விசா விவகாரத்தில் லலித் மோடிக்கு ரகசியமாக உதவி செய்தது ஏன் என்பது குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த வாரம் மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஐந்து நாட்கள் முடிவுற்ற நிலையில், இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவை திரும்பினர்.
லலித் மோடி சர்ச்சை, வியாபம் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தடைபட்டன. முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விசா விவகாரத்தில் லலித் மோடிக்கு உதவியது தொடர்பாக கடந்த வாரம் மக்களவையில் மிகவும் அழகான விளக்கத்தை சுஷ்மா ஸ்வராஜ் அளித்திருந்தார். மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக கூறினார். மேலும், "கருணையுடன் நடந்துகொள்வது குற்றமா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர் கருணை அடிப்படையில் உதவியிருந்தால் அதை ஏன் ரகசியமாக செய்தார் என்பதே எனது கேள்வி. அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் லலித் மோடிக்கு உதவப் போகிறேன் என சொல்லிவிட்டே மனிதாபிமானச் செயலை செய்திருக்கலாமே?
இப்போது எனது கேள்வியெல்லாம், லலித் மோடிக்கும் - சுஷ்மா குடும்பத்தினருக்கும் இடையே நடந்துள்ள பண பரிமாற்றம் குறித்ததே. அந்த பண பரிமாற்றத்தின் விவரங்களை சுஷ்மா வெளிப்படையாக விளக்க வேண்டும்.
லலித் மோடி வங்கிக் கணக்கில் இருந்து உங்கள் (சுஷ்மா ஸ்வராஜ்) வங்கிக் கணக்குக்கும், உங்களது குடும்ப நபர்கள் வங்கிக் கணக்குக்கும் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் வெளிப்படையாக தெரிவித்து விடுங்கள். அதன் பின்னர் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும்" இவ்வாறு ராகுல் கூறினார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து:
அதேபோல் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது குறித்தும் ராகுல் காந்தி பேசினார். "ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. எங்களது இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்ட்டிய தருணம் வந்துவிட்டது"
இவ்வாறு ராகுல் பேசினார்.
ஜேட்லி தாக்கு:
இதற்கிடையில் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, "காங்கிரஸ் உறுப்பினர்களில் பலரும் நாடாளுமன்ற முடக்கத்தை விரும்பவில்லை. அக்கட்சியின் தலைவரும், துணைத் தலைவருமே நாடாளுமன்றம் முடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் வகையில் காங்கிரஸ்காரர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர்.
சுஷ்மா ஸ்வராஜ் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு அதை சாக்காக வைத்து நாடாளுமன்றத்தை முடக்கி சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம்" எனக் கூறியுள்ளார்.