

1.5 லட்சம் தொழிலாளர்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். ரயில் கட்டணத்தில் அரசியல் வேண்டாம் என்று அகில இந்திய ரயில்வே தொழிற்சங்கம் (ஏ.ஐ.ஆர்.எஃப்) சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
லாக்டவுன் காரணமாக பணியிடங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு ஏற்ப மே 1-ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க உத்தரவிடப்பட்டது. சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான டிக்கெட் செலவை அந்தந்த மாநிலங்கள் பயணிகளிடம் வசூலித்து ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்குப் பரவலாக எதிர்ப்பு உருவானது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், ''வெளிநாட்டில் சிக்கியிருக்கும் நம்முடைய குடிமக்களுக்காக இலவசமாக விமானப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது மத்திய அரசு. குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான போக்குவரத்திற்காகவும் உணவிற்காகவும் 100 கோடி ரூபாய் செலவிடப்படும்போது பிரதமரின் கரோனா நிதிக்காக ரயில்வே அமைச்சகம் 151 கோடி ரூபாயை தானமாக அளிக்கும்போது, தொழிலாளர்களுக்காக இலவச ரயில் போக்குவரத்தை அளிக்க முடியாதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ''புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயணச் செலவை காங்கிரஸ் ஏற்கும். ஒவ்வொரு பிரதேச காங்கிரஸ் கமிட்டியும் (மாநில பிரிவு) ஒவ்வொரு ஏழைத் தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுக்கும்'' என்று சோனியா காந்தி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர்.
மே 1-ம் தேதி முதல் வியாழக்கிழமை வரை 163 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாகவும் நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு (ஏ.ஐ.ஆர்.எஃப்) பொதுச் செயலாளர் சிவ் கோபால் மிஸ்ரா வியாழக்கிழமை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் கட்டணம் தொடர்பாக தேவையின்றி அரசியல் செய்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறோம். ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தடுக்கவே இந்திய ரயில்வே கட்டணம் வசூலிக்கிறது. கரோனா வைரஸ் தொற்றுநோய்களின்போது பயணம் செய்வது ஆபத்தானது. ஆனால், ரயில்வே ஊழியர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் அதைச் சாத்தியமாக்குகிறார்கள். இது 115 சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு உதவியுள்ளது.
இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். சிறிய அரசியல் ஆதாயங்கள் காரணமாக ஒரு சீரிய அமைப்பை சீர்குலைக்க வேண்டாம். மாநிலங்களுடன் பேசிய பின் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் நிலைமையைக் கையாண்டுள்ளனர்.
இதில் தயவுசெய்து அரசியல் செய்ய வேண்டாம்’’.
இவ்வாறு சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.