

விசாகப்பட்டினம் கோபால்பட்டினத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் இருக்கும் எல்.ஜி.பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து ஸ்டைரீன் விஷவாயுக் கசிவு ஏற்பட்ட தருணத்தை பாதிக்கப்பட்ட நபர்கள் விவரித்தனர்.
இதுவரை 8 பேர் பலியாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 200 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் கூறும்போது, “என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர்.
என் குழந்தைகள் மூச்சுத் திணறலால் விழித்துக் கொண்டனர். ஒரே குழப்பம், அனைவரும் ஓடினர், நாங்களும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். அனைவரும் நினைவிழந்தோம், என்னால் ஒழுங்காகப் பேசக்கூட முடியவில்லை. குழந்தைகள் தற்போது மீண்டு வருகின்றனர்.
இன்னொரு நபர் “ஏதோ ஒரு துர்நாற்றம் வீச நாங்கள் வாந்தி எடுத்தோம். என்ன நடந்தது ஏன் இந்த நாற்றம் ஏன் வாந்தி என்பது புரியவேயில்லை. பிறகு மருத்துவமனையில் முடிந்தோம்” என்றார்.
அதிகாலை மக்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது இப்படி விஷவாயுக் கசிந்தால் என்னதான் அவர்களால் செய்ய முடியும்?
ஆலைக்கு அருகில் உள்ள 5 கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் 6 வயது சிறுமி உட்பட 8 பேர் இதுவரை பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதன் நீண்ட கால ஆரோக்கிய பாதிப்பு என்னவென்பது இனிமேல்தான் தெரியவரும்.
அனைவரையும் ஈரமான முகக்கவசம் அணியுமாறு ஒலிபெருக்கியில் போலீஸார் அறிவுறுத்தினர்.
உயிரைக் கையில் பிடித்து கொண்டு ஓடியதில் இருட்டில் கண் தெரியாமல் ஒருவர் கால்வாயில் விழுந்து பலியானதாகவும் இன்னொருவர் இருட்டில் கிணற்றில் விழுந்து பலியானதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இதில் மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகரி ஒருவரும் பாதிக்கப்பட்டார், பலரும் தங்கள் குழந்தைகளை வாரி அணைத்து கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றது நெஞ்சை பிசையும் சோகக் காட்சியாக இருந்தது என்று அங்கு நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.