

நாட்டில் பேருந்து மற்றும் கார் இயக்குபவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசு முழுமையாக அறியும் என்றும், அவர்களின் பிரச்சினைகளை அகற்ற அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு. நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.
உலக அளவிலான கோவிட் -19 நிலவும் இந்தக் கடினமான நாட்களில், பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, அதிக நேரம் செலவிட்டு உழைத்துவரும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் தாம் தொடர்ந்து தொடர்பிலிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியப் பேருந்து மற்றும் கார் இயக்குபவர்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே காணொலி மூலம் பேசிய கட்கரி ,போக்குவரத்தையும், நெடுஞ்சாலைகளையும் திறப்பது, மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என்று கூறினார்.
பொது மக்களுக்கான போக்குவரத்து சில விதிமுறைகளுடன் விரைவில் திறக்கப்படும் என்றார் அமைச்சர். ஆனால் பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும்போது முகக் கவசங்கள் அணிதல், கைகளைக் கழுவுதல், சுத்திகரிப்பான் மூலம் தூய்மைப்படுத்துதல் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது மற்றும் சமூக இடைவெளியைத் தொடர்வது ஆகியவை குறித்து அவர் எச்சரித்தார். மாநாட்டில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கவலைகளுக்கு, பதிலளித்துப் பேசிய அமைச்சர், பொதுமக்களுக்கான போக்குவரத்துத் துறையில், அரசு நிதி குறைவாகவும், தனியார் முதலீடு வளரும் வகையிலும் உள்ள, லண்டன் மாதிரியிலான பொதுப் போக்குவரத்து முறையைப் பின்பற்றுவது குறித்து, தமது அமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
அவர்கள் பின்பற்றி வரும் சிறந்த முறைகளை இங்கும் பின்பற்றுவது குறித்து வலியுறுத்திய கட்கரி, இது நீண்ட காலத்துக்கு, உள்நாட்டுத் தொழில் துறைக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்கும் என்றும் கூறினார். தற்போதைய பெருந்தொற்றுச் சூழலில், இந்திய சந்தை, மிகவும் இறுக்கமான நிதிச்சூழலில் உள்ளது என்பது குறித்து தாம் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இதற்கு எதிராகப் போராடுவதற்கு, அனைத்து பங்குதாரர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். சீனச் சந்தையில் இருந்து வெளிவரவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிற, உலகத் தொழில்துறை வழங்கும், ஒரு நல்ல வர்த்தக வாய்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியத் தொழில்துறை அழைக்கவேண்டும் என்று அவர் கூறினார். நாடும், தொழில் துறையும் இரு போர்களிலும் -- ஒன்று கொரோனாவுக்கு எதிரான போர்; மற்றொன்று பொருளாதார மந்த நிலைக்கு எதிரானது -- வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.