

கோவிட் நோயாளிகள் தங்களைத் தேவையின்றி மருத்துவமனையில் வைத்திருப்பதாக உணர்வதாக நாக்பூர் மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்றிவிட்டு வெளியே வந்துள்ள செவியலியர் கூறியுள்ளார்.
மகாராட்டிரா மாநிலம் நாட்டிலேயே அதிக அளவில் கரோனா நோயாளிகளை கொண்டுள்ள மாநிலமாகும். இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 49,391 ஆகவும், பலி எண்ணிக்கை 1,694 ஆகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 617 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் கரோனா பரவியுள்ளது. அங்கு கரோனா பாதிப்பு சூழல் மிகவும் கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மருத்துவமனை ஒன்றில் ஒரு மாத காலம் பணியாற்றிவிட்டு வெளியே வந்துள்ள செவியலியர் ராதிகா வின்சுர்கர் தனது அனுபவங்களை ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையின் கோவிட் 19 வார்டில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வீடு திரும்பியுள்ளேன். கடந்த ஒரு மாத காலத்தில் நான் பெற்ற அனுபவத்தில் முக்கியமாக தெரிந்துகொண்டது கோவிட் 19 நோயாளிகளைக் கையாள்வது மிகவும் கடினம் என்பதாகும்.
மருத்துவமனையில் பணியாற்றிய நேரங்களில் மிகவும் சோதனையான நேரங்கள் நினைவுக்கு வருகிறது. மேலும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) அணிவது மிகவும் வேதனையானது, ஏனெனில் இது கடமையின் போது முழுநேரமும் இதை அணிந்திருக்க வேண்டும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் தேவையில்லாமல் மருத்துவமனையில் வைக்கப்படுவதாக உணர்கிறார்கள். எரிச்சலடைகிறார்கள் மற்றும் தேவையற்ற விஷயங்களை கோருகிறார்கள்.
இவ்வாறு நாக்பூர் செவிலியர் ராதிகா வின்சுர்கர் தெரிவித்தார்.