வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800 இந்தியர்களை மீட்க நாளை முதல் விமான சேவை

வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800 இந்தியர்களை மீட்க நாளை முதல் விமான சேவை
Updated on
1 min read

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் 14,800 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை விமானம் மூலம் மீட்கும் பணி நாளை தொடங்குகிறது.

முதல் நாளான நாளை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு 10 விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. இந்த விமானங்கள் மூலம் கொச்சி, கோழிக்கோடு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், நகருக்கு 2,300 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தாயகம் வர விரும்பும் இந்தியர்கள், தங்களது சொந்த செலவில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து சான்றிதழை வைத்திருக்க வேண்டும். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக விமானத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விமானக் கட்டண செலவை பயணிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 7 நாட்களில் 64 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடற்படை கப்பல்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது. இதேபோல மாலத்தீவில் உள்ள இந்தியர்களை மீட்க கடற்படையைச் சேர்ந்த 2 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த 3 கப்பல்கள் விரைவில் கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in