Published : 06 May 2020 08:57 AM
Last Updated : 06 May 2020 08:57 AM

மணிப்பூர் மாநிலத்தின் கருப்பு அரிசி, காஷ்மீர் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு

மணிப்பூர் மாநிலத்தில் விளையும் கருப்பு அரிசி மற்றும் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் தனித்தன்மையுடன் தயாராகும் அல்லது விளையும் உணவுப்பொருட்களுக்கு, அதன் தரம், பாரம்பரியம் மற்றும் மக்களின் பேராதரவை கருத்தில் கொண்டு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் டீ, கர்நாடகாவின் மைசூர் பாகு, நாக்பூர் ஆரஞ்சு உட்பட பல்வேறு உணவுப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சில தினங்களுக்கு முன்பு இந்த அங்கீகாரம் கிடைத்தது.

அந்த வகையில் இப்போது மணிப்பூர் மாநிலத்தின் கருப்பு அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடகிழக்கு மண்டல வளர்ச்சி அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ‘சாக் ஹாவ்’ என்றும் அழைக்கப்படும் இந்த கருப்பு அரிசி ஊதா நிறத்தில் இருக்கும் என மணிப்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் வைட்டமின், தாதுப்பொருட்கள், ஆந்தோசயானின் உட்பட உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துகள் உள்ளன. குறிப்பாக, முடி, தோல் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.

இதுபோல காஷ்மீர் குங்குமப்பூவுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தவும் கற்றல், நினைவாற்றல் திறனை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. பிரியாணி, பால் அல்லது யோகர்ட் ஆகியவற்றிலும் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x