

காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் கடந்த சனிக்கிழமையன்று தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ராணுவ கர்னல் அசுதோஷ் சர்மா உட்பட 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினருக்கு தலைமை ஏற்றுச் சென்ற அசுதோஷ் சர்மா ஏற்கெனவே இருமுறை தீவிரவாத தடுப்பு பணிக்காக மத்திய அரசின் வீரதீர விருது பெற்றுள்ளார். அவரது உடல் சொந்த ஊரான ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
பின்னர், நேற்று காலையில் அவரது உடலுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அசுதோஷ் சர்மாவின் மனைவி பல்லவி சர்மா, மகள் தமண்ணா ஆகியோர் தங்களின் துயரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அசுதோஷ் உடலுக்கு சல்யூட் செய்து வணங்கினர். சர்மாவின் வயதான தாயாரும் இறுதி அஞ்சலி செலுத்தினார். சர்மாவின் குடும்பத்தினர் துயரத்தை தாங்கிக் கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அங்கிருந்தோரை நெகிழவைத்தது. பின்னர், அசுதோஷ் சர்மாவின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல, ஹந்த்வாராவில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் அனூஜ் சூட்டின் உடல் அவரது சொந்த மாநிலமான பஞ்சாபுக்கு கொண்டு செல்லப்பட்டது. சண்டிகரில் அனூஜ் சூட்டின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நேற்று நடந்தன.