தெலங்கானாவில் லாக்டவுன் மே 29-ம் தேதி வரை நீ்ட்டிப்பு: முதல்வர் சந்திரசேகர் ராவ்  அறிவிப்பு

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்
Updated on
2 min read

தெலங்கானா மாநிலத்தில் லாக்டவுன் காலம் மே 29-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் நேற்று நள்ளிரவில் அறிவித்தார். அதேசமயம், ஊரகப்பகுதிகள், நகராட்சிகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது

தெலங்கானாவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 1,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 585 பேர் குணமடைந்துள்ளனர், 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா நோயாளிகள் திடீரென குறைந்து கட்டுக்குள் வந்தது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக லாக்டவுனை தெலங்கானா அரசு அமல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு லாக்டவுனை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆனாலும் மாநில நலன் கருதி தெலங்கானா மாநிலத்தில் லாக்டவுன் காலம் மே 29-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். லாக்டவுனை மாநிலத்தில் தீவிரமாக அமல்படுத்துவோம், இரவு நேரத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும். அதாவது இரவு 7மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் தடுக்கப்படும்

கரோனா நோயாளிகளை தொடர்ந்து குறைத்து வருகிறோம், கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற போராடி வருகிறோம். மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் மெட்சல், ரங்கா ரெட்டி, ஹைதராபாத் ஆகியவற்றில்தான் கரோனா தொற்று அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன, இதில் 3 மாவட்டங்கள் அடுத்த சில நாட்களில் சிவப்பு மண்டலத்திலிருந்து வெளியேறி ஆரஞ்சு மண்டலத்துக்கு வந்துவிடும்

மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களுக்குத் தேவையான பிபிஇ உடைகளை முறையாக, தட்டுப்பாடின்றி வழங்கி வருகிறோம். மத்திய அரசு காட்டிய வழிமுறைகள் படியே சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் சிவப்பு மண்டலத்தில் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதித்தபோதிலும் நாங்கள் அனுமதிக்கவில்லை. கட்டுமானத் தொழிலுக்கான கடைகள், அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல உரங்கள், பூச்சிமருந்துகள், வேளாண் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படுகின்றன.

வரும் 15-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி மாநில நிலைமை குறித்து ஆலோசிக்கும். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துஆலோசிப்போம். ஊரகப்பகுதிகள், நகராட்சிகளில் பச்சை மண்டலங்களில் இருக்கும் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து கடைகளும் லாட்டரி முறைப்படி திறக்க அனுமதிக்கப்படுகிறது. நகராட்சிப்பகுதிகளில் 50 சதவீத கடைகள் திறந்திருக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்ததேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள பாடங்களுக்கு தேர்வுநடத்த உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும். அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்

இவ்வாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in